கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6000 பேர் நீக்கப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் காவல்துறையினருக்கு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் செய்தியாளர் சந்திப்பு குறித்தும், அதில் அவர் முன்வைத்துள்ள வாக்குகள் நீக்கப்படுவது குறித்த குற்றச்சாட்டு குறித்தும் பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கடந்த ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி வைத்தார். பெங்களுரு மத்திய நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியை 6 மாதம் ஆய்வுசெய்து, அங்கு நடைபெற்ற வாக்கு திருட்டை ராகுல்காந்தி வெளியிட்டார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று வரை உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டில் நேரடியாக தொடர்புடைய நபர்களை அழைத்து பத்திரிகையாளர்களை சந்திக்க வைத்துள்ளார்.

2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், தெற்கு கர்நாடகாவில் உள்ள ஆலந்த் தொகுதியில் என்ன முறைகேடு நடந்து என்று ராகுல்காந்தி ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். அதற்கு 3 நபர்களை சான்றாக ராகுல்காந்தி சொல்கிறார். கோதாபாய் என்கிற பெயரில் 12 வாக்குகளை நீக்குவதற்கான முயற்சி நடைபெற்றுள்ளது. அந்த அம்மாவை கூப்பிட்டு நீங்கள் 12 பேரை நீக்க முயற்சி செய்தீர்களா? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியபோது, அவர் தனக்கு செல்போனை உபயோகிக்க தெரியாது என்றும், தொழில்நுட்பமும் தெரியாது என்றும் கூறினார். மேலும் 12 பேரை நான் ஏன் நீக்க போகிறேன் என்று கேட்கிறார். கோதாபாய் அவர்களை நீக்காத நிலையில், 12 பேரின் வாக்குகளை நீக்க முயற்சி செய்தது யார் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்புகிறார். எந்த இடத்தில் இருந்து செய்கிறார்கள்? யாருடைய செல்போனில் இருந்து பண்ணப்பட்டது என்று கேள்வி எழுப்புகிறார்.

அடுத்தபடியாக 2வது சம்பவத்தில் சூரியா காந்த் என்பரின், செல்போன் எண்ணை பயன்படுத்தி 16 நிமிடங்களில் 12 பேரின் வாக்குகளை நீக்கியுள்ளனர். அவரால் நீக்கப்பட்ட பபிதா சௌத்ரி என்பரையும், சூரியா காந்தையும் மேடையில் ஏற்றியபோது அவர்கள் இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார்கள். 12 வாக்குகளை குறிப்பிட்ட நபர்கள் தான் நீக்கினார்கள் என்று ஆவணங்கள் உள்ளன. ஆனால், நீக்கியவரும், நீக்கப்பட்டவரும் இது குறித்து தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர். அப்போது யார் பெயரை நீக்கினார்கள் என்று கேள்வி எழுப்புகிறார். மூன்றாவதாக நாகராஜ் என்பவர், 36 செகண்டில் 2 வாக்குகளை டெலிட் செய்துள்ளார். சம்பந்தபட்ட நாகராஜ் தான் யாருடைய பெயரையும் நீக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

ஒரு வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் முதலாவதாக உள்ள பெயரை பயன்படுத்தி மற்ற பெயர்களை நீக்குகிறார்கள். இந்த முறைகேடு ஒரு இடத்தில் மட்டும் நடைபெறவில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மையப்படுத்தப் பட்ட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஒரு பெரிய டீம் கணினி, இணையதள வசதி, கால் சென்டர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த மோசடிகளை செய்துள்ளனர். 2023 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்கு வங்கி உள்ள இடங்களை தேர்வு செய்து வாக்காளர் பட்டியலில் இருந்து 6 ஆயிரம் வாக்காளர்களை நீக்கியோ அல்லது நீக்க முயற்சி செய்ததாக ராகுல்காந்தி தெரிவிக்கிறார். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்ரா தொகுதியில் 6,890 வாக்குகளை மோசடியாக சேர்த்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரே வரிசை எண், ஒரே அடையாள அட்டை பயன்படுத்தி நீக்கியுள்ளனர். இதனை நேரடியாக சென்று செய்தனரா? அல்லது ஒரு திட்டத்தை உருவாக்கி அதன்படி பொதுவாக இப்படி நீக்குகிறார்களா? என்று தெரியவில்லை.

2023ல் நடைபெற்ற இந்த முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் கர்நாடக சிபிசிஐடி போலீசாரிடம் புசார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்ஐஆர் பதிவுசெய்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இன்று வரை அதற்கு தேர்தல் ஆணையம பதில் அளிக்கவில்லை. அந்த கடிதத்தில் எந்த சர்வரில் இருந்து வந்தது? என்கிற அடிப்படையான கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள். 18 முறை கர்நாடக சிபிசிஐடி போலீசார் கேட்டும் இன்று வரை வழங்கவில்லை. இதுதான் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது எதார்த்தமாக நடந்த விஷயம் அல்ல. திட்டமிட்டு நடைபெற்றது என்பதற்கான ஆதாரமாக தான் தலைமை தேர்தல் ஆணையருக்கு 18 முறை கடிதம் போய் உள்ளது. ஆனால், முன்பு இருந்தவரும் சரி, தற்போது உள்ளவரும் சரி அந்த விவரங்களை தரவே இல்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாஜகவுக்கு ஆதரவாக இதை செய்கிறார் என்பதை நம்புவதற்கு 200 சதவீதம் வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது. ராகுல்காந்தி, ஞானேஸ்குமார் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியுள்ள ராகுல்காந்தி இன்னும் ஒரு வார காலத்தில் கர்நாடக சிபிசிஐடி போலீசாருக்கு ஆவணங்களை தர வேண்டும் என்று சொல்கிறார்.

ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு என்பது நாட்டின் முதுகு எலும்பையே முறிக்கும் செயலாகும். இவை எல்லாம் வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி செய்யப்பட்ட குளறுபடிகள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் சொல்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் 4 ஆயிரம் வாக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பாஜகவின் வெற்றி முழுமையும் இப்படிதான் நடந்துள்ளதா? என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு நியாயமாக பதில் அளிக்க வேண்டிய, விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவின் பக்கம் நிற்கிறபோது மக்கள், அரசியல் கட்சிகள் என்ன செய்வது? வடஇந்தியாவில் பாசிசத்தை எல்லோரும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது என்கிற சூழ்நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இது மிகவும் அபாயகரமான போக்கு. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மக்கள் களத்தில் இறங்காமல் எதுவும் நடக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


