முசிறி அருகே கணவனுக்க முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் இறக்காததால் கழுத்தை நெரித்து கொன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சிறு சோழன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி இவரது மகன் குமார் (43 ) விவசாய வேலையுடன் கோயிலுக்கு நேர்த்தி கடனுக்காக அலகு குத்தும் பக்தர்களுக்கு அலகு குத்தும் வேலையும் ,பூந்தோட்டம் வைத்து மலர்கள் பறித்து சந்தையில் விற்பனை செய்யும் வேலையும் பார்த்து வந்துள்ளார். (கடும் உழைப்பாளி) இவரது மனைவி விஜயா (36) இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, சோழிங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் பாலு (35) என்பவருடன் விவசாயி குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. தொழில் ரீதியாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறியது. இதில் பாலு அவ்வப்போது குமாரின் வீட்டுக்கு வந்து சென்றபோது குமாரின் மனைவி விஜயா உடன் பாலுவுக்கு தொடர்பு ஏற்பட்டதுள்ளது. இத்தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரின் பழக்கம் அரசல் புரசலாக குமாருக்கு தெரிந்திருந்த நிலையில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாலு குமார் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் விவசாய வேலை தொடர்பாக சிறுக சிறுக குமாருக்கு 15 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.கடன் சுமை காரணமாக அவ்வப்போது குமார் மனைவி விஜயாவை அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து திட்டி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் கடனை நான் அடைக்க முடியாது நீ அடைத்துக் கொள் எனவும் குமார் மனைவியை திட்டி உள்ளார். விஜயாவிற்கு பாலுவின் மீது இருந்த மோகம் கண்களை மறைக்க குமாரை கொலை செய்து விட்டு கள்ளக்காதலன் பாலுவுடன் நிம்மதியாக இருக்கலாம் என விஜயா முடிவு செய்துள்ளார். இதற்காக அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஒன்றில் விஜயா தினசரி இரண்டு தூக்க மாத்திரைகள் வாங்கி சேமித்துள்ளார். விவசாயி குமாருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்படும்போது முருங்கை இலை சூப் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விஜயாவும் பாலுவும் முடிவு செய்துள்ளனர். வழக்கம்போல குமார் நேற்று முன் தினம் வயிற்று வலியால் துடித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட விஜயா சுமார் 20 தூக்க மாத்திரைகளை முருங்கை இலை சூப் வைத்து அதில் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த குமார் இறந்துவிட்டாரா என சற்று நேரம் கழித்து விஜயா சோதித்துப் பார்த்துள்ளார். ஆனால் குமார் உயிருடன் இருந்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்த வயலில் பூ பறித்துக் கொண்டிருந்த கள்ளக்காதலன் பாலுவை அழைத்து வந்த விஜயா கணவன் இன்னும் சாகவில்லை என கூறியுள்ளார். பாலு தூக்கத்திலும், மயக்கத்திலும் இருந்த குமாரை இருவரும் சேர்ந்து வாயுடன் மூக்கை சேர்த்து பொத்தி அழுத்தி உள்ளனர். ஆனாலும் குமாரின் உயிர் பிரியவில்லை. இதையடுத்து பாலு குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல இருவரும் அங்கிருந்து பூப்பறிப்பதற்காக வயலுக்குச் சென்றுள்ளனர். சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த விஜயா கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி அலறி அடித்து நடித்துள்ளார்.
உறவினர்கள் வந்து பார்த்தபோது வயிற்று வலிப்பதாக கூறியவர் உயிரிழந்து கிடந்ததாக நாடகம் ஆடியுள்ளார். உறவினர்களும் குமாரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அப்போது குமாரின் இறப்பில் சந்தேகம் கொண்ட அவரின் உறவினர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறை 100 என்ற எண்ணுக்கு போன் செய்து குமார் இறப்பில் சந்தேகம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, உதவி ஆய்வாளர் லோகநாதன், கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர புலன் விசாரணை நடத்தியதில் விஜயா கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து முசிறி போலீசார் விஜயா மற்றும் பாலு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக கணவனை மனைவியே கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த நிலையில் இரண்டு மகனும் ஒரு மகளும் இன்று ஆதரவின்றி நிற்பதை பார்த்த உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.தந்தை கொலை செய்யப்பட்டுவிட்டார். தாய் சிறை சென்றுவிட்டார், படிக்கும் வயதில் பிள்ளைகள், வீட்டு வாசலில் கட்டி கிடக்கும் கால்நடைகள் என குடும்பமே ஆதரவின்றி, பரிதவிப்பான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது பார்ப்பதற்கு பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
ஆதரவற்ற குழந்தையாவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்