அ.தி.மு.க தற்போது அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார் என திருப்பூரில் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.திருப்பூர் வடக்கு மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாநகரம் போயம் பாளையம் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாநகர திமுக அலுவலகம் மற்றும் மாநகர அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேயர் செட்டிபாபு அரங்கத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார்.
திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், அவிநாசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கோகுல் கிருபா சங்கர் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கொண்டனர். முன்பாக திமுக மாநகர அலுவலக வளாகத்தில் திமுகவின் இரு வண்ணக் கொடியினை ஆர்.எஸ்.பாரதி ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் எஸ் பாரதி, “தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஊடகங்களுக்கு தெரியும் அங்கு நடந்தது என்ன என்பது. கரூரில் நடந்த முப்பெரும் விழா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மாநாட்டு பந்தலில் 1.50 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள், வெளியிலேயே 2 லட்சம் பேர் காத்திருந்தார்கள் இதையும் நாங்கள் சொல்லவில்லை அனைத்து ஊடகங்களும் கூறியது தான். எங்களுடையது கொள்கை கூட்டம், மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம். கலைஞர் கூறியது போல் எனது தொண்டன் தூங்கினால் கும்பகர்ணன் விழித்து நின்றால் இந்திரஜித், எதிர் கணைகள் எங்களை நோக்கி வருவதால், தற்பொழுது அனைத்து திமுக தொண்டர்களும் விழித்து இந்திரஜித் போல் இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை, ஒரு கோடி வீடுகளை சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் சந்தித்துள்ளார்கள்.
2 கோடியே 70 லட்சம் உறுப்பினர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கூட திமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களை பெற்று சாதனை படைக்கும் என தெரிவித்துள்ளனர். அவ்வாறு இருக்கும் பொழுது எங்களுடைய எதிரி யார் என்பதே எங்களுக்கு தெரியவில்லை. தேர்தல் தொகுதியை எதிர்பார்த்து திமுக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். இதுவரை நடந்த தேர்தல் நிகழ்வுகளை காட்டிலும் 2026 தேர்தல் அதிக இடங்களை பிடிக்கும் தேர்தலாக திமுகவுக்கு அமையும். அமித் ஷாவை சந்தித்து விட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி, முகத்தை மூடிக்கொண்டு சென்றதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி முகத்தை மூடிக்கொண்டு சென்றது போல் எடப்பாடி பழனிசாமியும் சென்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்று எடப்பாடி கேட்டார், இன்று அந்த காரில் உங்களுடன் சென்ற அந்த சார் யார் என்று நீங்கள் கேட்க வேண்டும். தற்பொழுது தமிழகத்தில் இருப்பது அதிமுக கிடையாது அமித்ஷா அதிமுக. அதை எடப்பாடி உறுதி செய்துவிட்டார். எங்களது நான்காண்டு கால ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். அடுத்த கட்டமாக 2026 தேர்தலில் யார் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பது கூட அமித் ஷா தான் முடிவெடுப்பார்.
அதிமுகவிலிருந்து நாள்தோறும் அதிருப்தியில் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வருபவர்களை சேர்ப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. எங்களது தலைவர் நேற்று சொல்லியுள்ளார் அதிமுகவிலிருந்து யார் வெளியே வந்து திமுகவில் இணைகிறீர்களோ அவர்களுக்கு எங்களுடைய கதவு திறந்தே இருக்கும் என கூறியுள்ளார் அதனால் வருபவர்களை கண்டிப்பாக நாங்கள் வரவேற்கிறோம். ஜெயலலிதா இறந்தபோதே 40 சதவீதம் அதிமுக தொண்டர்கள் திமுகவுடன் இணைந்து பணியாற்ற துவங்கிவிட்டார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் பண்ணி பேசிய அதிமுக தொண்டர்களை அவரை தளபதி என கொண்டாடத் துவங்கி விட்டார்கள். அப்பா அம்மா இல்லாத குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை கொடுத்து எப்படி அரவணைத்து வருகிறாரோ அதுபோல தற்போது அதிமுகவும் அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார். புதிதாக வாங்கிய துடைப்பம் சற்று வேகமாக தான் பெருக்கும் அதுபோலத்தான் புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் என தெரிவித்துள்ளாா்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் முட்புதற்குள் புகுந்து விபத்து…