இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தேசிய விருது வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் பராசக்தி, இட்லி கடை போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இசையமைத்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள இவர், நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘பிளாக்மெயில்’ திரைப்படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. இது தவிர மெண்டல் மனதில், இடி முழக்கம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 23) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் தேசிய விருதினை பெற்றுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
#71stNationalAwards – @gvprakash receiving the National Award for the Best Music Director Category for his work in #Vaathi..💥pic.twitter.com/9Ujva66OwA
— Laxmi Kanth (@iammoviebuff007) September 23, 2025

அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ பட பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வாங்குவதற்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி அணிந்து சென்று தேசிய விருதினை பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து ஜி.வி. பிரகாஷை பாராட்டி வருகின்றனர். இவர் இதற்கு முன்பாக சூர்யா- சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்திற்காகவும் தேசிய விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.