கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை விசாரிக்க, புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருங்கிணைந்த விசாரணை ஆணையம் முன்பே அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு புதிய விசாரணை அதிகாரியாக கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்தனை நியமித்துள்ளது. இதற்கு முன், கரூர் நகர காவல் நிலைய டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக கரூர் பயணம் செய்ய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு உறுதியாக கிடைத்தவுடன் விஜய்யும் நிர்வாகக் குழுவினரும் கரூர் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.