திமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என பாஜக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மாநகர ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கழக செயலாளர்களோடு நியமிக்கப்பட்டுள்ள பாக ஒருங்கிணைப்பாளர்கள் (Booth Co-ordinators) கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளரும் தமிழ்நாடு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த்கக் கூட்டத்தில், தேர்தல் பணிகளை ஆற்றிட ஏதுவாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளரும் தேர்தல் மண்டல பொறுப்பாளருமான ஆ. ராசா எம்.பி. கலந்து கொண்டு பாக முகவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய அவர், “ 2026 ல் நடைபெறவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கான தேர்தல்.
இந்தியாவை மீட்க போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியை மத்திய அரசு முடித்து விட்டது. கையில் அதிகாரம் இல்லாத அரசியல் கட்சிகள் மோடியை எதிர்க்க பயந்து கொண்டு இருந்த நிலையில், மோடியை எதிர்த்து ‘தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல்’ என பேசியவர் நமது முதல்வர் . திமுக ஆட்சியில் இருக்க கூடாது என பாஜக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தும் திமுகவை அழிக்க முடியாமல் இருக்க காரணம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற இரும்பு மனிதனுக்கு பின்னால் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் தத்துவம்தான். இந்தியாவையும் தமிழ்நாட்டையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க கூடியது தேர்தல், நம் நாட்டில் உணவு, உடை, கலாச்சாரம் அனைத்து வேறு வேறு; ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆகையால் திமுக நிர்வாகிகள் இந்த தேர்தலை எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும். கழகத் தலைவர் அவர்கள் கூறுவது போல், ‘இருநூறு வெல்வோம் வரலாறு படைப்போம்’ என அனைவரும் சூளூரைக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” என்று அவர் பேசினார்.