
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மறைந்த ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு அக்டோபர் 28ஆம் வரை இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி , அவர் வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் ரவுடி நாகேந்திரன் உடல்நல குறைவால் கடந்த 9ம் தேதி உயிரிழந்ததை அடுத்து அவருடைய மகன் அஸ்வத்தாமன் மற்றும் அஜித் ராஜாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
பின்னர், இடைகால ஜாமின் முடிந்ததையடுத்து, நேற்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் சரண் அடைந்த அஸ்வத்தாமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தன்னுடைய தந்தையின் மரணத்தை தொடர்ந்து, அதன் பிறகு நடக்க உள்ள காரியம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் தனக்கு 15 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அக்டோபர் 28 வரைக்கும் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் கடந்த ஒன்றரை வருடங்களாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்து வரும் சதீஷ் மற்றும் ஹரிஹரனுக்கும் ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.