தமிழ்நாட்டு பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் தெரிவித்துள்ளாா்.
ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அதிமுக சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம்,“தேர்தலுக்காக தற்போது அனைத்தையும் செய்து தருவதாக கூறுவார்கள். இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் தான் இருக்கின்றன. இன்னமும் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என பேசி உள்ளார்.

மகளிருக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சொந்தக் காலில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, சுய உதவிக்குழு, புதுமைப்பெண் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பெண்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ள நிலையில், பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டு கொச்சைப்படுத்திய சி.வி. சண்முகம் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திராவிட மாடல் அரசின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் குறிப்பாக கர்நாடகம் ,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஸா, இமாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், சிக்கிம் போன்ற மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. பெண்கள் நலத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டு பெருமைமிக்க பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் வக்கிரமாக பேசி பெண்களை இழிவுபடுத்தி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் வலியுறுத்தியுள்ளாா்.
சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!