கூடலூரில் இருந்து கரியசோலை சென்ற அரசுப் பேருந்தை, காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கிராமப்புற சாலைகளில் நடமாடுவதும், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும், விவசாய பயிர்களை நாசம் செய்தும் வருகின்றன . இந்த நிலையில் கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று கரியசோலை கிராமத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுது தனது குட்டியுடன் சாலையை கடப்பதற்காக, அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை பேருந்து வருவதை பார்த்ததும் ஆக்ரோஷத்துடன் பேருந்தின் முன்பக்கம் ஓடி வந்துள்ளது.
இதை பார்த்த அரசு பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். சத்தமிட்டவாறே பேருந்தை நோக்கி ஓடி வந்த யானையை பார்த்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் அந்தக் காட்டு யானை சிறிது நேரம் சாலையில் நின்று பிறகு மீண்டும் குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், தொடர்ந்து காட்டு யானைகள் கரியசோலை பகுதிகளில் முகாமிட்டிருப்பதால் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆக்ரோஷத்துடன் யானை பேருந்தை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
