பா.ஜ.க. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செய்த வாக்கு திருட்டை வெளிச்சமிட்டு காட்டுவோம் என காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கையேழுத்து இயக்க விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய பா.ஜ.க அரசு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடத்திய வாக்குத்திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்க விளக்க பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை,மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு….
நாட்டில் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இதனுடைய விளைவுகள் எப்படி இருக்கும். அந்த விளைவுகளை சந்திக்கக்கூடிய தலைமுறைக்கு எவ்வளவு சங்கடங்கள் இருக்கும் என்று நாம் உணரவில்லை. உண்மைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பெரும் சவாலாக உள்ளது. அதனை காங்கிரஸ் இன்று எதிர் கொண்டு வருகிறது. 10 ஆயிரம் ஆண்டுகள் பல அரசர்கள் இந்தியாவில் ஆட்சி செய்தனர்.
ஆனால், குடிமகனுக்கு தன் அரசைத் தானே தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை கிடைத்தது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டு உரிமையை வழங்கியது காங்கிரஸ் தான். ஆனால் இதனை அன்றே ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது.
இன்று பிரதமர் மோடி பீகாரில் ஓட்டு வாங்க குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்கி வருகிறார். இது ஜனநாயகத்தின் அவல நிலை. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அந்த மக்களை சந்திக்க நினைப்பதற்கு ஒரே காரணம் இந்த மக்களிடம் மீண்டும் ஓட்டு வாங்க வர வேண்டும் என்பது தான். ஓட்டு வாங்க வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் எல்லா கட்சிக்கும் இருப்பதால் தான் மக்களை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் ஓடி வருகிறோம்.
இன்று பா.ஜ.க. அரசு, ரஷ்யா மற்றும் சீனாவை போல தேர்தல் ஒரு கட்சிக்கே உரிய நிகழ்வாக மாறும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.இது ஜனநாயகத்திற்கே ஆபத்து. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது ஒருவர் காலணியை கொண்டு வீசி இருக்கிறார். இது ஜனநாயகத்திற்கு எவ்வளவு பெரிய சவால் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். நாடு எவ்வளவு மோசமாக சென்று கொண்டு உள்ளது என்பதை இது காட்டுகிறது என்றாா்.
செல்வப்பெருந்தகை பேச்சு…
அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், வாக்கு திருட்டை தடுக்க வேண்டி இந்த நிகழ்வு நடக்கிறது. ஏழை எளியவர்களுக்கும் வாக்கு உரிமையை பெற்று தந்தது காங்கிரஸ். ஆனால், இன்று வாக்குரிமை காணாமல் போய்விட்டது. உயிருடன் இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை. இறந்தவர்களுக்கு வாக்கு. வாக்கு திருட்டு எப்படி நடந்தது என்பதை ராகுல்காந்தி விளக்கி உள்ளார். ஆதாரபூர்வமாக எடுத்து சொன்னார்.
அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பொறுப்பு எங்கள்மீது உள்ளது. பா.ஜ.க. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செய்த வாக்கு திருட்டை வெளிச்சமிட்டு காட்டுவோம், என அவர் தெரிவித்தார்.
இந்த வாக்குத் திருட்டுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து பெறும் இலக்குடன் நாங்கள் செயல்படுகிறோம். அதில் குறைந்தது 1 கோடி கையெழுத்து நிச்சயம் பெறப்படும், என அவர் உறுதியளித்தார்.
விஜய் குடுமி சிபிஐ கையில்! பகீர் பின்னணி! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!