உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் அவர் சிபிஐ விசாரணைக்கு சென்று சதி வலைக்குள் சிக்கிக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறித்து அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது :- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், தாங்கள் கேட்டது போல உச்சநீதிமன்ற மேற்பார்வையில் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டு இருப்பதாக தவெக தரப்பில் சொல்கிறார்கள். அதேவேளையில், இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு பின்னடைவு என்றும் சிலர் சொல்கின்றனர். ஆனால் அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்.ஐ.டியை அமைத்தது தமிழ்நாடு அரசு கிடையாது. எஸ்.ஐ.டியை அமைப்பது உயர்நீதிமன்றத்தின் தனிப்பட்ட முடிவு ஆகும். கட்சிக் கூட்டங்கள் நடத்துவது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். குறிப்பாக கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், நீதிபதி தவெக குறித்து மேற்கோள் காட்டி பேசாமல் இருக்க முடியாது. எஸ்.ஐ.டி அமைக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதபோது, நீதி கிடைப்பதற்காக அவர் எஸ்.ஐ.டி அமைத்தார். இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
சிபிஐ விசாரணை கேட்ட மனுதாரர்கள் எல்லாரும் போலியானவர்கள் என்று யூடியூப் சேனல்களின் களஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அப்போது போலி மனுக்களை தாக்கல் செய்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டுமா?. ஆனால் அதையும் சிபிஐ விசாரிக்கலாம் என்று சொல்கிறார்கள். அதிமுககாரர்களும், தவெககாரர்களும் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தை கேலி கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா, நாங்கள் சிபிஐ கேட்கவில்லை என்று சொல்கிறார். அப்போது யாருக்காக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது? சிபிஐ விசாரணை கேட்டவர்கள் போலி என்கிற போது யாருக்காக உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. சிபிஐ குறித்து தவெகவின் பார்வை என்ன? அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது திமுகவுக்கும், பாஜகவுக்கும் மறைமுக கூட்டணியை உறுதி படுத்துகிறீர்களா? என்று விஜய் கேள்வி எழுப்பினார். தற்போது விஜய்க்கும், பாஜகவுக்கும் டீலிங் முடிந்து விட்டதா? அதனால்தான் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை பெற்றுக்கொண்டீர்களா? என நாம் கேட்கலாம் அல்லவா?

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள். அந்த 41 குடும்பங்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் ஒரு கூட்டம் தலைமறைவாகி கொண்டிருக்கிறது. இன்று வரை சதிக் கோட்பாடை நீதிமன்றத்தில் பேசாமல் வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே உங்களுக்கு கூச்சம் இல்லையா? நிவாரணத் தொகை அறிவித்தீர்கள். இதுவரை கொடுக்க வில்லை. நீங்கள் அதிமுக, பாஜககாரர்களை வைத்து போலியான வழக்குகளை போடச் சொல்லி, பாதிக்கப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி உள்ளனர். பன்னீர்செல்வம் என்பவர் மனைவி, பிள்ளையை பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்ட நபர். பணத்தாசையால் வழக்கு தொடர கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டார். உங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் கூசாமல் பொய் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களை எல்லாம் முட்டாள் என்று நினைக்கிறார்கள். தமிழக மக்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதில் பாஜக உடன் தவெக போட்டி இடுகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு கொண்டு சென்றுள்ளது ஒரு டிராப் என்று விஜய்க்கு தெரிய வில்லையா?
உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்கள் போலி என்கிறபோது, எதற்காக சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது? அப்போது பாஜக விஜயை தூக்கப் பார்க்கிறார்களா? ஸ்டாலினை எதிர்க்க எடப்பாடி பழனிசாமி சரியான தலைவராக இல்லை. அப்போது விஜய் வருகிறபோது அவர் ஸ்டாலினை எதிர்க்க சரியான தலைவர் என்று மக்கள் பார்த்தார்கள். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தலைமறைவானதால் அவர்கள் நீ ஹீரோ இல்லை, ஜீரோ என்று நினைக்கிறார்கள். மக்களிடம் இன்றைக்கும் வாக்குகள் இருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகும் அவரை மக்கள் ஆதரித்தார்கள். ஆனால் டிரெண்ட் தற்போது மாறுகிறது. விஜய் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க தொடங்கிவிட்டனர். ஜான் ஆரோக்கியசாமி முதலில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை சொன்னார். ஆனால் தற்போது அதை பாதிக்கப்பட்டவர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே கரூருக்கு சென்று அவர்களை சந்திக்கலாம். ஆனால் தனித்தனியாக ஒவ்வொரு குடும்பத்தை சந்திக்காமல் ஒட்டுமொத்தமாக ஒரு மண்டபத்தில் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நாம் செல்கிறபோது கட்சிக்காரர்கள் யாரும் வரக்கூடாது என்று சொல்கிறார்கள்.
இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜோம்பி கூட்டத்தை வளர்த்துவிட்டனர். அதனுடைய பிரதிபலனாக இன்றைக்கு வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கிறார். விஜய் தன்னுடைய சொந்த கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகிறார். ரசிகர்கள் கூட்டத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தக் கூடிய புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருக்கிறார். புஸ்ஸி ஆனந்துக்கு முன்ஜாமின் கிடைத்தால் அவர் வெளியே வந்து கூட்டிச் செல்கிறேன் என்பார். ஆனால் புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரியில் அமைச்சராக வேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. அப்போது விஜய்க்காக மீண்டும் சிறைக்கு செல்வதோ, தலைமறைவு வாழ்க்கையோ வாழ விரும்ப மாட்டார். எனவே சுற்று பயணத்தை ரத்து செய்துவிட்டு, நேரடியாக தேர்தலை சந்திக்கலாம் என்றுதான் அவர் சொல்வார். எனவே இந்த கூட்டம் வீட்டிற்குள் முடங்கிக்கிடப்பதைதான் விரும்புவார்கள். அதுவரை விஜய், அது செய்கிறார், இது செய்கிறார் என்று ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்யும்.
விஜய்க்கு, தற்போது வழங்கப்படும் ஒய் பிளஸ் பாதுகாப்பு, இசட் பிரிவாக அதிகரிக்கப் போகிறது. அதற்காக அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர். தற்போது 11 பேர் இருக்கும் நிலையில், அதை 150 ஆக உயர்த்துவார்கள் என்கின்றனர். பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அவர் தனியாக சென்று பிரச்சாரம் செய்ய மாட்டார். எடப்பாடி உடனோ, அல்லது நயினார் உடனோ சேர்ந்துதான் பிரச்சாரம் செய்வார். விஜய்க்கு, என்.டி.ஏ கூட்டணியில் குறைவான இடங்களை தான் வழங்குவார்கள். ஒருவேளை அந்த தொகுதிகளுக்கு மட்டும் செல்வாரா? அல்லது பொதுக்கூட்டங்களுக்கு மட்டும் செல்வாரா? என்று தெரியவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக விஜய் சதி வலையில் சிக்கிக்கொண்டார். விஜய் என்டிஏ கூட்டணிக்கு செல்வதன் மூலம் அந்த அணி வெற்றி பெறுமா? என்பதை போக போகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வளவு நாள் தனித்து வருவேன் என்று சொல்லிவிட்டு அதிமுக – பாஜக உடன் கூட்டணி சேர்ந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது கேள்விக்குறிதான். இதனால் விஜயுடைய அரசியல் வாழ்க்கை பலவீனமடையும். சிபிஐ விசாரணையை விட, அவர் எஸ்.ஐ.டிக்கு போயிருந்தால் பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது. எஸ்.ஐ.டி மூலம் விஜய்க்கு எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்து சிபிஐ விசாரணை என்கிற டிராப்பிற்குள் சென்று அவரே மாட்டிக்கொண்டுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.