நடிகர் சேரன், தவெக குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் விஜய் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் எனவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி ஜனநாயகன் படத்தை முடித்த பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறி உள்ளார் விஜய். எனவே கட்சி, மாநாடு, பிரச்சாரம், பரப்புரை என அரசியல் சுற்றுப்பயணம் செல்கிறார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்த பிறகும் விஜய்க்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்காதது தொடர்பாகவும் விமர்சித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் கரூரில் நடந்த சம்பவத்திற்கு விஜய் எப்படி நேரடியாக பொறுப்பாக முடியும் என்று பலரும் விஜய்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில் தான் நடிகரும் இயக்குனருமான சேரன் சில நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் தள பக்கத்தில், “உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை கூட வரவழைத்துதான் ஆறுதல் சொல்லுவீங்களா. இது மிகவும் தவறாக இருக்கிறது. நேரில் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செல்வதுதான் மரியாதை. அப்போதான் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்க முடியாது” என்றும் “ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான் என்கிற நம்பிக்கையை உருவாக்கணும். முடியலன்னா அதை வளர்த்துக்கணும். ரசிகர் மன்றம் இருக்கிற வரை யாரும் கேட்கல. எங்களை எப்போ ஆளனும்னு வர்றீங்களோ அப்பதான் இந்த கேள்வி” என்றும் குறிப்பிட்டு சில பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இந்த முடிவு எடுத்தமைக்கு பாராட்டுவோம். இழப்பின் மதிப்பை கணக்கிட முடியாதுதான்… ஆனாலும் இப்போதைக்கு 41 குடும்பங்களும் ஆறுதல் அடையும். குடும்பத்துக்கு 20 லட்சம் வழங்குவதோடு இந்த உதவிகளும் வழங்கியது பாராட்டுக்குரியது. துயரில் தோள்கொடுப்போம். @actorvijay @TVKVijayHQ pic.twitter.com/qxU4R0FP19
— Cheran Pandiyan (@CheranDirector) October 14, 2025

அதை தொடர்ந்து தவெக கட்சியினர் சார்பில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என்றும் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு, ஆயுள் காப்பீடு செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சேரன் இதனையும் குறிப்பிட்டு, “இந்த முடிவு எடுத்தமைக்கு பாராட்டுவோம். இழப்பின் மதிப்பை கணக்கிட முடியாது தான். ஆனாலும் இப்போதைக்கு 41 குடும்பங்களும் ஆறுதல் அடையும். குடும்பத்திற்கு 20 லட்சம் வழங்குவதோடு இந்த உதவிகளையும் வழங்குவது பாராட்டுக்குரியது. துயரில் தோள் கொடுப்போம்” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.