சியான் 63 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரம் கடைசியாக ‘வீர தீர சூரன் பாகம் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இது தவிர விக்ரம், ‘மெய்யழகன்’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், விஷ்ணு எடாவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
அதற்கு முன்னதாக விக்ரம், ‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி தற்காலிகமாக சியான் 63 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு பல மாதங்களாக இந்த படம் குறித்த வேறு எந்த தகவலும் வெளிவரவில்லை. இதற்கிடையில் மடோன் அஸ்வின் கதையில் விக்ரமுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லை என்பதால் இந்த படத்தின் இயக்குனர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, மடோன் அஸ்வினுக்கு பதிலாக புதுமுக இயக்குனர் ஒருவர், சியான் 63 படத்தை இயக்க உள்ளார் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


