
ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் அருகே கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காசிபக்காவில் வெங்கடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது தனியார் அமைப்பு சார்பில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் 2000 முதல் 3000 பக்தர்களுக்கு உண்டான வசதிகள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இன்று ஏகாதசி மற்றும் சனிக்கிழமையை ஒட்டி பெருமாளை தரிசனம் செய்வதற்காக ஸ்ரீகாகுளம், காசிபக்கா மட்டுமன்றி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல பகுதிகளில் இருந்து, அதிக அளவில் பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கோவிலில் குவிந்ததால், பக்தர்களை வரிசையில் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

தடுப்பு கம்பிகள் சாய்ததில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாலும், முண்டியடித்துச் செல்ல முயன்றதாலும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் , குழந்தைகள் உட்பட 9 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் பலரது நிலை கவலைக்கிடமானதாக இருப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தனியாருக்கு சொந்தமான கோவில் என்பதாலும், போலீசார் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவில்லை என்பதாலும், பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


