மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


சாணக்கியா ஊடகத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- மத்திய உளவுத் துறை தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளின் பலம் என்ன என்பது குறித்து சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. அதில் திமுகவுக்கு 34 சதவீதம் வாக்குகள் உள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 1%, மக்கள் நீதி மய்யம் 2%, காங்கிரஸ் 3%, சிபிஎம் – சிபிஐ 2%, விசிக 1% வாக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 43 சதவீதம் வாக்குகள் உள்ளன. அதேவேளையில் அதிமுகவுக்கு கடந்த மக்களவை தேர்தலை விட 1% வாக்குகள் அதிகரித்து, 21% வாக்குகள் உள்ளன.
பாஜகவுக்கு ஒரு சதவீதம் வாக்குகள் குறைந்து 10% ஆக உள்ளது. பாமக-வுக்கு உள்ள 4 – 5% வாக்குகளில் ராமதாஸ் – அன்புமணி பிளவு காரணமாக 3% வாக்குகளாக குறைந்து உள்ளது. தே.மு.தி.க ஒரு சதவீதம் வாக்குகள் உள்ளன. அரசுக்கு எதிரான மனநிலை வாக்குகள் 3% உள்ளன. அதிமுக – பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஒட்டுமொத்தமாக 39% வாக்குகளை தான் பெறுகிறது. சீமான் 3% வாக்குகளை பெறுகிறார். விஜய் 4 முதல் 5% வாக்குகளை பெறுவார் என்றும் சர்வேயில் தெரியவந்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு வருமான வரித்துறை விதித்த அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவில், விஜய் மக்கள் மன்றத்தில் ஒரு லட்சம் பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதான் அவருடைய உண்மையான பலம். விஜய்க்கு 4- 5 சதவீதம் வாக்குகளே உறுபடுத்தப்படாதது தான். ஆனால் ஆதவ் அர்ஜுனா தங்களுக்கு 27 சதவீதம் வாக்குகள் இருப்பதாக சொல்வது உறுதிபடுத்தப்படாதது ஆகும். சாணக்கியா இணையதளத்தில் வெளியான கருத்துக் கணிப்பில் விஜய்க்கு 20 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ரங்கராஜ் பாண்டே சொல்கிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகி மேலே வரும்பட்சத்தில் 69 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் அவர் சொல்கிறார். சாணக்கியா கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 36 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. நாம் தமிழருக்கு 5 சதவீதம் வாக்குகள் உள்ளது. தவெக 20 சதவீதம் வாக்குகள் வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி 39 சதவீதம் வாக்குகளை பெறுகிறது.

சாணக்யா கருத்துக்கணிப்பில் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும்? என்கிற கேள்விக்கு காங்கிரஸ் உடன் கூட்டணி 18%, சீமான் 21%, அதிமுக – பாஜக 61% என்று முடிவுகள் வந்துள்ளது. இதன் மூலம் அவர்களுடைய நோக்கம் அதிமுக – பாஜக உடன், விஜய் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. சாணக்யா கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் அதிகமாக உள்ளது, தமிழக அரசுக்கு எதிரான அமலாக்கத் துறை நடவடிக்கைகள் சரியானது என்று பெரும்பான்மையினர் சொல்லியிருப்பதாக சொல்கிறார்.
ஸ்டாலினின் செயல்பாடுகள் மோசம் என்று 41 சதவீதம் பேரும், உதயநிதி செயல்பாடுகள் மோசம் என்று 52 சதவீதம் பேர் சொல்லி இருப்பதாக சொல்கிறார். இதில் முழுக்க முழுக்க தன்னுடைய கருத்துக்களை கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு பிரச்சினை இரண்டு வடிவங்களில் உள்ளன. முதலாவது வருமான வரித்துறை. விஜய் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமான உறவினர்களுக்கும் பிரச்சினை உள்ளது. மற்றொன்று தவெகவுக்கு ஆதவ் அர்ஜுன் தான் நிதி வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் லாட்டரியை கொண்டுவருவதற்காக அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். மற்றொன்று சிபிஐ விசாரணை. இதுவரை 32 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சாட்டிலைட் ஸ்கேனிங் முறையில் விஜய் கூட்டத்தை ஸ்கேன் செய்துள்ளனர். ஆனால் இந்த விசாரணையில் திமுக உள்ளே வந்ததால் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்படவில்லை. அப்படி இருந்தால் தானே விசாரிக்க முடியும்.
சிபிஐ இலக்கு விஜய் தான். அவர் தரப்பில் தவறு உள்ளதா? என்பதை கண்டுபிடிப்பதில் சிபிஐ மும்முரமாக உள்ளனர். கூட்டணிக்காக தான் அவர்கள் வேலை பார்க்கிறார்கள். விஜய் அப்படி அதிமுக கூட்டணிக்கு சென்றாலும், திமுக – அதிமுக கூட்டணி மோதல் கடுமையாகும். விஜய் பாஜகவை ஆதரித்து நிலைப்பாட்டை எடுத்தால் அவருடைய வாக்கு வங்கி பாதியாகிவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


