விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் கொட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண தூக்கம் போடும் பழனிசாமிக்கு, திமுக அரசு என்றால் வீராவேசம் வந்துவிடுகிறது. பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள்தான்!
நெல்மணிகள் நனைந்துவிட்டது என ஸ்பாட்டுக்கு போய் ஓரங்க நாடகம் போட்ட பழனிசாமி, ஒன்றிய அரசு நெல் ஈரப்பத அளவினை 22 சதவிகிதமாக உயர்த்தாததைக் கண்டிக்காமல் எங்கே போனார்? அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது பழனிசாமி எங்கிருந்தார்? மோடி அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, சாகுபடி, பயிர்க்காப்பீடு பற்றியெல்லாம் பேச அருகதை இருக்கிறதா? கஜா புயலின் போது பயிர்கள் எல்லாம் நாசம் ஆன நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்ட பழனிசாமி எல்லாம் விவசாயியா?

நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சிப்பது ஒன்றிய பாஜக அரசு. அதை எதிர்த்துக் கேட்கத் திராணியில்லாத, தைரியமில்லாத துரோகி பழனிசாமி வீணாகத் தமிழ்நாடு அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் அவதூறை பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா என்ன?
விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்! பல்லுயிர்ப் பெருக்கத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் காரணமான கனிம வளச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்த வரலாறு தானே உங்களுடையது. ’மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குச் செய்தன என்னவென்று!’ எனக் கேட்கிறார். 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்கடித்து பழனிசாமிக்கு மக்கள் அளித்த பதில் தெரியவில்லையா?
கோவை, மதுரை மெட்ரோவுக்கு வர வேண்டும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதையே பெரும் சாதனையாகத் தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சியில் இருந்த போது அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.
டிவியை பார்த்து ஆட்சி நடத்திய கையாலாகாத, நிர்வாகத் திறனற்றவர் என்று இந்தியாவே சிரித்த முதல்வர்தானே பழனிசாமி. கால்கள் மாறுவதையும் கார்கள் மாறுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பழனிசாமிக்கு ரோசம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பார்த்துவிட்டு வரும் போது ஏசி காரிலும் ’குப்’ என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை மறந்துவிட்டீர்களா பழனிசாமி? அமைச்சர் ரகுபதி ஆவேசமாக கூறியுள்ளாா்.
சாதிவாரி சர்வே, உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதியேற்போம் – அன்புமணி


