திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், இன்று (டிசம்பர் 16) மதிய இடைவேளையின் போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொண்டாபுரம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவவரது மூத்த மகன் மோகித் அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் இன்று அரையாண்டு தேர்வை முன்னிட்டு தேர்வு எழுதிய மாணவர்கள் உணவு இடைவேளையின் போது உணவு வாங்கிக் கொண்டு பள்ளி கைப்பிடி சுவர் மீது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது . பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் அந்த சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. இதில் அந்த கைப்பிடி சுவற்றின் மீது அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த மோகித் என்ற ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் கீழே விழுந்த போது சுற்றுச்சுவர் மாணவன் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த மாணவனின் பெற்றோர்களும், உறவினர்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதனால் பள்ளி வளாகமே சோகத்தில் மூழ்கியது. கோபமடைந்த உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“பள்ளி கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், சுவர்கள் பலவீனமாக இருப்பது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் எந்தவொரு பராமரிப்புப் பணியையும் மேற்கொள்ளவில்லை” என்று உறவினர்கள் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டினர்.
சாலை மறியல் மற்றும் பதற்றம்:
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து திருத்தணி டிஎஸ்பி (பொறுப்பு) கந்தன், வட்டாட்சியர் சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். “உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பதற்றம் கட்டுக்குள் வந்தது.
அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. ஒரு பிஞ்சு உயிர் பள்ளி வளாகத்திலேயே பலியானது திருவள்ளூர் மாவட்ட மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பு சம்பந்தமாக ஆர்.கே.பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


