என்.கே.மூர்த்தி

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று எல்லோரும் பொழுதுபோக்கு மையங்களிலும் வழிப்பாட்டுத் தளங்களிலும் ஒன்று கூடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். கடந்தாண்டு கசப்பான ஆண்டாக இருந்திருந்தாலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நமது முயற்சிகளுக்கு வழி காட்டுகின்ற நம்பிக்கையான ஆண்டாக இருக்கட்டும் என்று ஒருவரை ஒருவர் கை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

உலகத்தில் பல்வேறு நாடுகள் போர்களில் ஈடுப்பட்டு வருகிறது. சில நாடுகள் போர்களுக்கு தயாராகி வருகிறது. இன்னும் சில நாடுகள் உள்நாட்டு கலவரத்தை தூண்டி மக்களை காவு வாங்கி வருகிறது. இப்படி உலகம் முழுவதும் சண்டை, சச்சரவு, வன்முறை, போர் என்று அமைதியற்ற நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த அமைதியற்ற சூழ்நிலையினால் உக்ரைன், காசா போன்ற நாடுகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பசியின் கொடுமையினாலும், வாழ வழி இல்லாமலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
இது எங்கையோ நடக்கின்ற நிகழ்வு இல்லை. இன்று காசாவில், உக்ரைனில், வங்காளதேசத்தில், நேபாளத்தில் நடக்கிறது. நாளை இந்தியாவிலும் நடக்கலாம், தமிழ்நாட்டிலும் நடக்கலாம், உங்கள் ஊரிலும் நடக்கலாம். அப்படி ஒரு நிலை வந்தால் நீங்களும் நானும் பிள்ளைகளை இழந்த பெற்றோராகவும், ஒரு பாக்கெட் பிஸ்கெட்டிற்கு கையேந்தக் கூடியவர்களாகவும் மாறலாம். மனிதனின் வெறியினால் அறிவியல் தொழில் நுட்பமும், ஆயுதங்களும் உலகத்தை அழிக்கின்ற நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது.
இதற்கு காரணம் யார்?
உக்ரைனில், இஸ்ரேலில், நேபாளத்தில் நடக்கின்ற கலவரத்திற்கும், போருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்… கேள்வியும் கேட்கலாம்!.. நான் சொல்கிறேன், நீங்கள் தான் பொறுப்பு! நீங்களும் நானும் தான் முழு பொறுப்பு!
இந்த உலகம் என்பதும் சமுதாயம் என்பதும் ஆகாயத்தில் இருந்து தானாக கீழே விழுந்தது அல்ல. நீங்களும் நானும் சேர்ந்தது தான் சமுதாயம். உங்கள் உறவினர்களும், நண்பர்களும், என்னுடைய உறவினர்களும் நண்பர்களும் இணைந்து வாழ்கின்ற வாழ்க்கை தான் உலகம். அப்படி கட்டமைக்கப்பட்ட இந்த உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கு நானும் நீங்களும் தான் பொறுப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகம் என்பது நம்மில் இருந்து உருவானது தான். எனவே, உலகத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் நம்மை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உலகத்தில் நடக்கின்ற வன்முறைக்கும், குழப்பத்திற்கும், போருக்கும், பசி, பட்டினி என்கிற துயரத்திற்கும் நாம் தான் காரணம். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் அந்த மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்.
ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காசாவில் நடக்கின்ற போராக இருந்தாலும் நேபாளத்திலும், வங்காளதேசத்திலும் நடக்கின்ற உள்நாட்டு புரட்சியாக இருந்தாலும் அது அந்த நாட்டுடைய அரசியல் கட்சிகளின் பிரச்சனை என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒதுங்கிக் கொள்ளவும் கூடாது. அது உங்களுடைய என்னுடைய பிரச்சனை என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த உலகம் மாறவேண்டும், இந்த சமுதாயத்தில் மாற்றம் நிகழவேண்டும் என்று பேராவல் கொள்கிற நாம், காசாவில் உள்ள குழந்தைகள் ஒரு கிளாஸ் பாலுக்கு ஏங்குகிறது என்று கவலைப்படுக்கின்ற நாம், நமக்குள் உள்ள குறைபாடுகளை மதிப்பீடு செய்து மாற்றம் பெற வேண்டுமா? இல்லையா?

தன்னை அறிவதே பேரறிவின் தொடக்கம் என்பார் வாழ்வியல் ஞானி ஜிட்டு. கிருஷ்ணமூர்த்தி. தன்னை அறிவது, தன்னை அறிந்துக்கொள்ள முயற்சி செய்வதுதான் மாற்றம். தன்னை அறிந்து கொள்வதற்கு ஒரு நோக்கம் வேண்டும்! அந்த நோக்கம் என்பது என்னால் இந்த சமுதாயத்தை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்து தொடங்க வேண்டும்.
ஒரு சிறிய தீ குச்சி உலகத்தையே எரித்து சாம்பலாக்கி விடும் என்பதை நம்புகின்ற நாம், நம்மை நாம் புரிந்து கொண்டு, அதன் மூலம் நம் சிந்தனையில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் இந்த உலகத்தை மாற்ற முடியாது என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக முடியும்!
நம்முடைய உலகம் என்பது குடும்பம், நண்பர்கள் என்று எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை மாற்றம் அடையச் செய்தால் போதும். அது அலையை போன்று வெளியே போய் கொண்டே இருக்கும்.
எனவே, தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமானது. அது மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தோ, ஒரு புத்தகத்தை படித்தோ மாற்றத்தை அடைய முடியாது. அதை நமக்குள் நாம் தான் கண்டுப்பிடிக்க வேண்டும். அதற்கு சரியான நோக்கமும், ஆர்வமும் இருந்தால் போதும்.
தன்னை அறிதல் என்பது ஒரு ஆராய்ச்சி போன்றது. அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தெளிவான நோக்கம் இல்லாமல் பலவீனமாக இருந்தால் தோல்வியில் தான் முடியும்.
கார்ல் மார்க்ஸ்க்கு தெளிவான நோக்கம் இருந்தது. முதலாளித்துவம் என்கிற ராஜாளி கழுகு, பாட்டாளி மக்களின் உழைப்பை சுரண்டி கொழுத்து வாழ்கிறது. அதை ஒழித்தே தீர வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அவர் கண்ணெதிரே பெற்ற குழந்தைகள் ஒவ்வொன்றாய் வறுமையில் உயிரிழந்தது. ஆனாலும் அவருடைய இலட்சியத்தில் இருந்து பின் வாங்கவில்லை. உலகத்தையே மாற்றிக் காட்டினார்.
உலக மாற்றம் என்பது தன்னில் ஏற்படுகின்ற மாற்றத்தில் இருந்து தொடங்குகிறது.
தன்னறிதல் என்றால் என்ன?
தன்னை அறிதல் என்பது ஒருவர் தற்போது எப்படி இருக்கிறாரோ அதை அப்படியே உணர்ந்து ஏற்றுக்கொள்வது. அதாவது நான் பேராசை பிடித்தவனாகவும், பொறாமை எண்ணம் கொண்டவராகவும், சாதி மதவெறி பிடித்த வன்முறையாளனாகவும் இருக்கிறேன் என்றால் அதை உணர்ந்துக்கொள்வது. அதை நேர்மையாக ஒப்புக் கொள்வது. ஆம், நான் வன்முறை எண்ணம் கொண்டவராகத்தான் இருக்கிறேன் என்று நேர்மையாக ஒப்புக் கொள்வது தான் ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தில் இருந்துதான் நீங்கள் யார் என்பதையும், நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டுப்பிடிக்க முடியும்.
ஒழுக்கம் என்பது எது இல்லையோ அதுவாக மாறுவது அல்ல. ஒழுக்கம் என்பது இப்போது எதுவாக இருக்கிறீர்களோ அதிலிருந்து விடுதலை பெறுவதாகும்.
மிக வேகமாக சீரழிந்து வரும் சமுதாயத்தில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. புதிய மாற்றத்தை, புதிய சமுதாயத்தை படைக்க முயற்சிக்கும் நமக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானது.
நம்மை சுற்றியுள்ள துயரங்கள், போர் வெறி, சாதி மத வெறி ஆகிய குழப்பங்கள் உள்ள சமுதாயத்தை மாற்ற நம்மில் மாற்றம் ஏற்பட வேண்டும். தன்னிடத்தில் இருந்து ஒரு அடிப்படையான புரட்சியை கொண்டுவர வேண்டும். நம்மை நாம் நிமிடத்திற்கு நிமிடம் கூர்மையாக கவனித்து புரிந்துக்கொண்டால் அப்போது ஒரு அமைதி நிகழும். அந்த அமைதியில் அன்பு பெருகும். அதுதான் மாற்றம்.
புத்தாண்டே வருக! எங்களுக்கு புதிய புத்தியை தருக!! – என்.கே.மூர்த்தி


