ஜனநாயகன் பட வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் இறுதி தீர்ப்பை ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளாா்.

விசாரணையின் போது, தணிக்கை குழு தலைவரிடம் புகார் வந்துள்ளதாக ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படக் காட்சிகளுக்கு எதிரான புகார் நிலைக்கத்தக்கது அல்ல என கருத்து தெரிவித்தார். மேலும், புகாரில் குறிப்பிடப்பட்ட காட்சிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புகார் எவ்வாறு பரிசீலனைக்கு உரியது என கேள்வி எழுப்பினார்.
படத்தில் இருந்து எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டன என்ற விவரங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். “புகாரில் கூறப்பட்டுள்ள காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதே” எனக் குறிப்பிட்ட நீதிபதி, தணிக்கை வாரியம் UA சான்று வழங்க முடிவு செய்த பிறகு, ஏன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய அரசு தரப்பில், படத்தில் ராணுவத்தின் சில முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றை ராணுவ வல்லுநர்களிடம் கருத்தறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார்.
இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், தணிக்கை குழுவில் இருந்த ஐந்து உறுப்பினர்களும் ஒருமனதாக படத்துக்கு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ததாக தெரிவித்தார். ஒரே ஒரு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரும்பான்மை முடிவை செல்லாது எனக் கூற முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
மேலும், தணிக்கை வாரியத் தலைவர் மண்டல அதிகாரிக்கு எந்தக் கடிதமும் எழுதியதாக தகவல் இல்லை என்றும், அந்தப் புகார் குறித்து இன்றுதான் தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தணிக்கை வாரியத்தின் கால வரையறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதி பி.டி.ஆஷா தெரிவித்தார்.
ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தப் படத்தை இவ்வாறு தாமதப்படுத்துவது நியாயமல்ல என்றும், ஜனவரி 9-ம் தேதி வெளியிட தட்கல் முறையில் டிசம்பர் 18-ம் தேதியே விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், தணிக்கை வாரியத்திற்கு மறு பரிசீலனை செய்ய அதிகாரம் இல்லை என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு தரப்பு, ஜனவரி 5-ம் தேதியே படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. தணிக்கை வாரியத்தின் இணையதளத்திலும் இதுதொடர்பான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மறு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பிறகே வழக்கில் நிவாரணம் கோர முடியும் என ஒன்றிய அரசு வாதிட்டது.
மேலும், தணிக்கை வாரிய குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், வாரியத் தலைவர் மறு ஆய்வுக்கு பரிந்துரைக்கலாம் என்றும் ஒன்றிய அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியம் மீதான இத்தகைய புகார்கள் ஆரோக்கியமானவை அல்ல எனவும், வழக்கின் இறுதி தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 9-ம் தேதி காலையே தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னிந்தியர்களுக்கு குளோபிடோக்ரல் மருந்து பயனளிக்கவில்லை – மரபியல் துறை அதிர்ச்சித் தகவல்
`


