தென்னிந்தியர்களில் கிட்டத்தட்ட 3ல் ஒருவருக்கு இதய நோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் குளோபிடோக்ரல் என்னும் மருந்து பயனளிக்கவில்லை என மரபியல் துறை ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுக்க வழங்கப்படும் குளோபிடோக்ரல் என்னும் மருந்து தென்னிந்தியர்களின் சுமார் 31 விழுக்காடு நபர்களுக்கு சிகிச்சையில் எந்த பயனையும் அளிப்பதில்லை என்று சென்னை பல்கலைக்கழகத்தின் மரபியல் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்த 45 முதல் 55 வயதுடைய 197 இதய நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பங்கேற்றவர்களில் 62 நபர்களுக்கு அதாவது சுமார் 31 விழுக்காட்டினருக்கு இந்த மருந்து ரத்த தட்டுகளை கட்டுபடுத்துவதில் தோல்வி அடைந்துள்ளது. மரபணு மற்றும் உடல்நிலை காரணிகளால் இந்த மருந்துகள் 3ல் ஒரு பங்கு தென்னிந்தியர்களிடம் வேலை செய்யவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக இந்த மருந்து செயல்பட உதவும் உடலின் ஆற்றலை தடுக்கும் மரபணு மாற்றம் 34 விழுக்காடு தென்னிந்தியர்கள் இடையே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்தானது உடலில் செயல்படாமல் போகிறது. மேலும், அதிக உடல் பருமன் மற்றும் 2ம் வகை நீரிழிவு நோய் இருபவர்களிடமும் குளோபிடோக்ரல் மருந்தின் எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய நோயாளிகளுக்கு மாரடைப்பு அபாயம் இருப்பதால் மரபணு சோதனைக்கு பிறகு தகுந்த மாற்று மருந்துகளை வழங்க மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.



