போக்ஸோ சட்டத்தில் மாற்றம் வருமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை!
பதின்ம வயதினரின் காதல் விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு சட்ட மாற்றத்திற்கான ஆலோசனையை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கொண்டு வரப்பட்ட ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ், பரஸ்பர சம்மதத்துடன் காதலிக்கும் இளம் வயதினரும் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்திய சட்டத்தில் ‘ரோமியோ-ஜூலியட்’ விதிமுறையை கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

புது டெல்லி: பதின்ம வயதினரிடையே (Adolescents) நிலவும் பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவுகளைக் கிரிமினல் குற்றமாகக் கருதாமல் பாதுகாக்க, போக்ஸோ (POCSO) சட்டத்தில் “ரோமியோ-ஜூலியட் விதிமுறையை” (Romeo-Juliet clause) சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய சில வழிகாட்டுதல்களை ரத்து செய்த நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் அடங்கிய அமர்வு, இந்த முக்கியமான கருத்தை முன்வைத்தது.
’ரோமியோ-ஜூலியட்’ விதிமுறை என்றால் என்ன?
ஒரே வயதுடைய அல்லது மிகக்குறைந்த வயது வித்தியாசம் கொண்ட பதின்ம வயதினர், தங்களுக்குள் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் ஈடுபடும்போது, அவர்களைக் கடுமையான சட்டங்களின் கீழ் குற்றவாளிகளாக நடத்துவதைத் தடுப்பதே இந்த விதிமுறையின் நோக்கமாகும். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ‘ரோமியோ-ஜூலியட்’ நாடகத்தின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், காதலிக்கும் பதின்ம வயதினர் ‘சட்டப்பூர்வ வன்கொடுமை’ (Statutory Rape) குற்றச்சாட்டின் கீழ் அநியாயமாகத் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்க உருவாக்கப்பட்டது.
இந்த விதிமுறை யாருக்குப் பொருந்தும்?
இரண்டு பதின்ம வயதினருக்கு இடையே நிலவும் வயது வித்தியாசம் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் (பொதுவாக 2 முதல் 5 ஆண்டுகள் வரை) இருந்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. உதாரணமாக, 16 வயதுடைய ஒருவர், 3 ஆண்டுகளுக்குள் வயது வித்தியாசம் கொண்ட ஒருவருடன் உறவில் இருந்தால், அது குற்றமாகாது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதே போக்ஸோ சட்டத்தின் நோக்கம். ஆனால், பல நேரங்களில் காதலிக்கும் பதின்ம வயதினரின் உறவை எதிர்க்கும் குடும்பத்தினர், அதனை வன்கொடுமை வழக்காக மாற்றி சிறுவர்கள் மீது புகார் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் வயது வரம்பு மாற்றம்
இந்தியாவில் 1940-களில் இருந்து பெண்களின் பாலியல் சம்மதத்திற்கான வயது 16 ஆக இருந்தது. ஆனால், 2012-ல் கொண்டு வரப்பட்ட போக்ஸோ சட்டத்தின் மூலம் இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டது. 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் குழந்தைகளாகக் கருதும் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் (UNCRC) அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.
தற்போதைய சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட ஒருவருடன் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அது ‘சட்டப்பூர்வ வன்கொடுமை’ என்றே கருதப்படுகிறது.
அதிகரித்து வரும் கிரிமினல் வழக்குகள்
’என்ஃபோல்ட் இந்தியா’ (Enfold India) என்ற அமைப்பின் தரவுகளின்படி, அஸ்ஸாம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் பதிவாகும் போக்ஸோ வழக்குகளில் 24.3 சதவீதம் பதின்ம வயதினரின் காதல் உறவுகள் தொடர்பானவை. இதில் 80.2 சதவீத வழக்குகள், உறவை எதிர்க்கும் பெண்களின் பெற்றோர்களால் தொடரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில், பெண் சம்மதித்திருந்தாலும், சட்டம் அவரை ‘பாதிக்கப்பட்டவர்’ என்றும், ஆண் சிறுவனை ‘குற்றவாளி’ என்றும் கருதுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்கவே ‘ரோமியோ-ஜூலியட்’ விதிமுறை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.


