மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதலிடம் வகித்து வருகிறார்.


தைப்பொங்கல் முதல் நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1000 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடிபிடி வீரர்கள் தீரமுடன் அடக்கி வருகின்றனர். நடப்பு ஆண்டு காளையை அடக்கிய வீரர்களின் பெயர்களை அறிவிக்க ஸ்கோர் போர்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 8 சுற்றுகள் முடிவில் இதுவரை 701 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதில் 167 மாடுகள் பிடிபட்டன. 9வது சுற்றுக்கு செல்ல 29 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி முதலிடத்தில் உள்ளார். அவனியாபுரத்தை சேர்ந்த மற்றொரு வீரரான ரஞ்சித் 9 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். 8 காளைகளை அடக்கிய அவனியாபுரம் மணிகண்டன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதனிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்பவருக்கு தமிழக முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசளிக்கப்பட உள்ளது.


