யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இதில் புலவாயோவில் நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து, முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி, இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் சுடினி 36 ரன்களும், அட்னிட் ஜாம்ப் 18 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹெனில் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி 2 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணி 33 ஓவர்களில் 96 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய இந்திய அணி 17.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்டர் அபிக்யான் குண்டு 42 ரன்களும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 19 ரன்களும் எடுத்தனர்.


