சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அமைந்துள்ளது. சதுரகிரி மலை அகஸ்தியர், போகர், கோரக்கர் உள்ளிட்ட 18 சித்தர்களும் தங்கி தவம்புரிந்த மலைப்பகுதியாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று தை அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த தை அமாவாசை சிறப்பு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கோவில் நிர்வாகத்தின் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


