spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…

7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்துக்குள், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…

சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி முதல், வருகின்ற 30 ஆம் தேதி வரையில்,5  அடுக்கு பாதுகாப்பும், 24, 25,26 ஆகிய மூன்று தினங்கள், உச்சகட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பும், அமுலில் உள்ளது. இதை அடுத்து விமான நிலையத்தின் உள்பகுதியில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் போலீசாரும், காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவி உடன், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

we-r-hiring

சென்னை விமான நிலையத்திற்குள் செல்லும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், காவல்துறையினர் அனைவரையும், கேட்களில் பாதுகாப்புப் பணியில் நிற்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தி, அவர்களை முழுமையாக பரிசோதித்து, அடையாள அட்டைகள், பாஸ்கள் போன்றவைகளை கவனமாக ஆய்வு செய்து, அதன் பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர்.

இவ்வாறு 7 அடுக்கு உச்சகட்ட பாதுகாப்புடன், பலத்த கெடுபிடிகள் இருக்கும் சூழ்நிலையில், இன்று காலை 7 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1, வருகை உள்பகுதியில், டிரான்சிட் விமான பயணிகள் செல்லக்கூடிய, கேட் எண் 103 அருகே, சுமார் 25 வயது இளைஞர் ஒருவர், சந்தேகப்படும் விதத்தில் சுற்றி கொண்டு நின்றார்.

இதை சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு கேமராவில் பார்த்த, பாதுகாப்பு உயர் அதிகாரிகள், அது குறித்து விமான நிலையத்தில், பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

உடனடியாக, அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்படை அதிகாரிகள், அந்த மர்ம இளைஞர் பிடித்து விசாரித்தனர். அதோடு பயணிகள் வருகை பகுதிக்குள் நின்று இருந்த, அவரை சோதித்த போது, அவரிடம் விமான டிக்கெட் அல்லது விமான நிலையத்துக்குள் வருவதற்கான பாஸ் எதுவும் இல்லை. அதோடு அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரித்த போது, அவர் விமான நிலையத்தையே, விலைக்கு வாங்க இருப்பதாகவும், எனவே விமான நிலையத்தை பார்வையிட, உள்ளே  வந்ததாகவும் கூறினார். அதோடு அவரைத் தொடர்ந்து விசாரித்த போது அவருடைய பெயர் ஜோஸ்வா (26), சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதனால் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அதிகாரிகள் கருதினர்.

ஆனாலும் மேல் நடவடிக்கைக்காக, அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த இளைஞரிடம் மேலும் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே 7 அடுக்கு, உச்சகட்ட பாதுகாப்பு அமுலில் இருக்கும் போது, இந்த நபர் எப்படி விமான நிலையத்திற்குள், அதுவும் வருகை பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்? என்பது பெரும் புதிராக உள்ளது. வருகை பகுதிக்குள், வெளியில் இருந்து உள்ளே, முறையான சிறப்பு அனுமதி பாஸ் இல்லாமல், யாரும் செல்ல முடியாது. ஆனால் இந்த நபர் வருகை பகுதி, கேட் எண் 3 வழியாக உள்ளே நுழைந்து, உள்ளே இருக்கும் மற்றொரு கேட்டையும் கடந்து, டிரான்சிட் பயணிகள் செல்லக்கூடிய வழியில், கேட் எண் 103 அருகே நின்றுள்ளார்.

அதோடு இவர் இன்று காலை 6 மணி அளவில் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் காலை 7 மணிக்கு மேல் தான், அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த ஒரு மணி நேரம், அவர் உள்ளே எங்கெல்லாம் சுற்றினார்? என்று விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளை பாதுகாப்பது அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

அதோடு இந்த மர்ம நபர் நுழைந்த கேட் எண் 3, மற்றும் உள்பகுதியில் உள்ள கேட் ஆகிய பகுதிகளில், இன்று காலை பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களிடம், உயர் அதிகாரிகளின் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு, உச்சகட்ட பாதுகாப்பு அமுலில் இருக்கும் போது, மர்ம நபர் ஒருவர், எந்தவித தடையும் இல்லாமல், விமான நிலையத்திற்குள் நுழைந்து, உள்ளே சுற்றிக்கொண்டு இருந்து, பிடிபட்டுள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலைய பாதுகாப்பு வளையத்தில், பெரிய அளவில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக, பரபரப்பு காணப்படுகிறது.

தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி: தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்!

MUST READ