தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் தொடர்பான திருத்தச் சட்டமுன்வடிவு 2026 சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் “தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம், (ஜனவரி 24) 2026 தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். 2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூலச் சட்டத்தில் சில முக்கியமான மாற்றங்களை இந்தப் புதிய திருத்தம் மேற்கொண்டுள்ளது.

சட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
பெற்றோர்களுக்கு பிரதிநிதித்துவம்: தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவில் இனி மாநில பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி அதிகாரப்பூர்வ உறுப்பினராக இடம் பெறுவார். இதன் மூலம் கட்டண நிர்ணயத்தில் பெற்றோர்களின் குரல் நேரடியாக ஒலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
7 பேர் கொண்ட புதிய குழு: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 7 பேர் கொண்ட வலுவான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவே தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணத்தை இறுதி செய்யும்.
3 ஆண்டுகளுக்கு மாற்றமில்லை: ஒருமுறை பள்ளிக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால், அது அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் நடைமுறையில் இருக்கும். இதனால் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவது தடுக்கப்படும்.
மேல்முறையீட்டு கால அவகாசம் நீட்டிப்பு: கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவின் மீது பள்ளிகள் ஆட்சேபனை தெரிவிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக மாற்றங்கள்: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்குப் பதிலாக, இனி தனியார் பள்ளிகள் இயக்குநர் இந்தக் குழுவின் உறுப்பினராகச் செயல்படுவார்.
பெற்றோர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:
இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்துவது கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக, சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைக் குறைக்க இது உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி, இந்தச் சட்டம் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தும் என்றாலும், சிபிஎஸ்இ (CBSE) மற்றும் ஐசிஎஸ்இ (ICSE) பள்ளிகள் தொடர்பான கட்டண விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவற்றிற்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்…


