பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது ..
சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சரத், தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து, அன்னை வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அந்த கட்டிடத்துக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில், அந்த இடம் சர்க்கார் புறம்போக்கு நிலம் என்றும், பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அந்த கட்டிடத்தை அகற்றுவது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுப்பாதையில் மத கட்டமைப்புகள் கட்டுவதற்கு எந்த ஒரு நபருக்கு உரிமை இல்லை என, உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கனவே தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய ஆக்கிரமிப்புகளை மத உணர்வுகளை காரணமாகக் கூறி நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதி, தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
”தமிழ்நாடு தலைகுனியாது” – 234 தொகுதிகளிலும் திமுக தேர்தல் பரப்புரை…


