2026–27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 17ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், அதே நாளில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான முக்கிய அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, 2026–27 நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி சட்டப்பேரவையில் வாசிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
