சென்னை கொரட்டூர் பகுதியில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து சுமார் 2500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை கொரட்டூர் பகுதியில் “அலையன்ஸ் ஆர்ச் ஸ்பிரிங்ஸ்” என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 2036 குடும்பங்கள் சுமார் 2500 கோடி ரூபாய் செலுத்தி வீடுகளை வாங்கி வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த குடியிருப்புகள் அமைந்துள்ள நிலம் கோவிலுக்கு சொந்தமானது என ஒருவர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், 2036 குடும்பங்கள் வசித்து வரும் நிலம் கோவிலுக்குச் சொந்தமானது என தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து, கோவில் நிலத்தில் வீடுகளை கட்டி குடியிருப்புவாசிகளிடமிருந்து சுமார் 2500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை வசூலித்த “அலையன்ஸ் ஆர்ச் ஸ்பிரிங்ஸ்” நிறுவனம் தற்போது ‘நவ் கால்டு அர்பன் ரைஸ்” என்ற பெயரில் செயல்பட்டு வருவதாகவும், தங்களை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குடியிருப்பு வாசி சங்கரன் கூறுகையில், “அலையன்ஸ் ஆர்ச் ஸ்பிரிங்ஸ்” என்ற நிறுவனத்தின் தற்போது “பில்டர் அர்பன் ரைஸ்” என தற்போது மாற்றப்பட்டு தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அலையன்ஸ் ஆர்ச் ஸ்பிரிங்ஸ் குடியிருப்பில் 2014 இல் இருந்து வசித்து வருகிறோம். 2015இல் கோயில் நிலத்தில் பட்டா இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பில்டர் இது குறித்து தங்களிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டார். பின்னர் 2015 முதல் இது தொடர்பான கேஸ் நடந்து கொண்டே இருக்கின்றது. பட்டா கேன்சல் செய்யப்படுவது திரும்பக் கொடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

பில்டரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டபோது, அதிகாரிகள் தவறு செய்து விட்டார்கள் என தங்களிடம் சொல்லி சமாதானம் செய்து வந்தார்கள்.
2018 இல் வீடு பதிவு செய்ய சென்றபோது பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போது, பில்டரிடம் லீகலாக பதிவு செய்ய முடியவில்லை என்று தெரிவித்தோம். இது குறித்து நாங்கள் ஆறு மாதத்தில் சரி செய்வோம் என்று தெரிவித்தார்கள். அதன் பின்னர், இந்த நிறுவனத்தின் பெயரில் பட்டா கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்து விவகாரம் முடிந்தது என்று நாங்கள் நினைத்து விட்டோம்.
2018 இல் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்துள்ளது. இந்த நிலம் கோவில் நிலம் என ஒருவர் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவருக்கும் சொந்தமில்லை, அலைன்ஸ் நிறுவனத்திற்கும் சொந்தமில்லை என தீர்ப்பு வந்துள்ளது. இது கோவிலுக்கு சொந்தமானவை என்பதும் தெரியவந்தது.
கோவில் நிலம் என தீர்ப்பு வந்த நிலையில் தற்போது தங்களது வீடுகளை விற்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்தனர். வங்கியில் கடன் வாங்கி வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. தற்போது வங்கியில் தங்களுக்கு நோட்டீஸ் என்பது வழங்கப்படுகிறது. உங்களது தற்போது இருக்கக்கூடிய வீட்டின் மதிப்பு என்பது ஜீரோவாக இருப்பதாகவும், வேறு ஏதாவது டாக்குமெண்ட் கொடுக்க வேண்டும் என வங்கி தரப்பில் தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆறு வருடமாக தாய் பத்திரத்தை கொடுக்க சொல்லி பில்டரிடம் கேட்டு கொண்டு வருகிறோம். ஆனால் தற்போது வரை பில்டர்கள் யாருமே எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மின்சாரம், தண்ணீர் என அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம். 2036 குடும்பங்களுடன் சொத்து மதிப்பு தற்போது சுமார் 2500 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என்றும், இதற்கான உரிய நீதி தங்களுக்கு கிடைக்க வேண்டும்.இது தொடர்பாக தான் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
பில்டரே எங்களுக்கு விற்கப்பட்ட வீட்டை வாங்கிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணத்தை தங்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…


