எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும் முக்கியம் என்று மாணவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை வழங்கினார். 
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளரும், மாநகராட்சி சுகாதார நிலைக்குழுத் தலைவருமான சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் கோவி. செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் 500 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர். கல்வி உதவி வழங்கும் முயற்சி சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் திவ்யா சத்யராஜ், சமீபத்தில் கரூர், சேலம், திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் உயிரிழந்தவர்களின் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயின் உரையை கேட்டதாக கூறிய அவர், “மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் வாக்குறுதிகளைப் பார்த்து சொல்லுகிறேன் என அவர் கூறியிருந்தார். மக்களின் தேவைகள் குறித்த தெளிவான புரிதல் இல்லையெனில் மக்கள் எவ்வாறு ஆதரவு அளிப்பார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், கட்சியுடன் தொடர்புடைய அஜித்தா விவகாரத்தை மேற்கோள் காட்டி விமர்சனம் செய்தார். தவெக தொண்டர்களுக்கு சவால் விடுத்த அவர், “மூன்று நாட்களுக்குள் விஜயுடன் எடுத்த புகைப்படத்தை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புங்கள்” என்று தெரிவித்தார். அதேபோல், “துண்டுச் சீட்டு இல்லாமல் 10 தொண்டர்களின் பெயர்களை கூற வேண்டும்; தலைவராக இருப்பதால் தொண்டர்களை அறிந்திருக்க வேண்டும்” என்றும் கூறினார். அரசியலில் தைரியம் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே. மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திவ்யா சத்யராஜ், “படிப்பே மிகவும் முக்கியம். எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். வரும் தேர்தலை முன்னிட்டு செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் தேர்தலில் வெல்வதற்காக அல்ல; மக்கள் பணிக்காகவே கட்சியில் இணைந்துள்ளேன். அனைவருடனும் இணைந்து மக்கள் பணி செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்” என்று தெரிவித்தார்.
விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…


