முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று தலைவர்களில் இருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ளது, அதிமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்கு வங்கி பாரம்பரியமாக அதிமுகவுக்கு தான் போய்க் கொண்டு இருந்தது. ஓபிஎஸ்-ன் வருகையால் அந்த வாக்கு வங்கி திமுகவுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முக்குலத்தோரின் வாக்குகள் சிதறுவது திமுகவுக்கு தான் சாதகமாகும். என்னை பொருத்தவரை ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று தான் நினைக்கிறேன். அதிமுகவில் மூன்று முறை அமைச்சராக இருந்துவிட்டு திடீரென திமுகவுக்கு வந்து போட்டியிடுவது சரியாக இருக்காது. ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட் தர வாய்ப்பு உள்ளது. இதுவரை அவர் பெரிய டிமாண்ட் வைப்பதாக தெரியவில்லை. ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவு தினத்திற்கு பிறகு முடிவு எடுப்பதாக கூறியிருந்தார். அதன்படி தற்போது முடிவு எடுத்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்று திமுக தலைமை தான் முடிவு செய்யும்.

ஓபிஎஸ், திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கி சுருங்கும். தற்போது அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் மட்டும் தான் உள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மற்ற தலைவர்களான ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் மாறிவிட்டனர். கமுதி கூட்டத்தில் சசிகலா பேசியவை எல்லாம் உண்மைதான். அதை நானே எழுதியிருக்கிறேன். ஆனால் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாயம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை. தற்போது அதிமுக தோல்வி அடைகிற கட்சியாகவே காட்சி அளிக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் சசிகலாவுக்கு இருக்கும் வரவேற்பு அளவுக்கு டிடிவி தினகரனுக்கு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். டிடிவிக்கு இருக்கும் செல்வாக்கை விட ஓபிஎஸ்க்கு குறைவுதான். தற்போது முதலிடத்தில் உள்ள சசிகலாவும், மூன்றாம் இடத்தில் உள்ள ஓபிஎஸ்-ம் ஒரே இடத்திற்கு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவது என்பது திமுகவுக்கு தான் சாதகமாகும்.

சசிகலா தனிக்கட்சி தொடங்கி உள்ள நிலையில், அவர் விஜயுடன் கூட்டணி செல்வதற்கு வாய்ப்பு கிடையாது. காரணம் விஜய், ஊழலை ஒழிப்பதாக சொல்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று வந்தவர், தேர்தலில் போட்டியிடாத நபருடன் எப்படி அவர் கூட்டணி வைக்க முடியும்? சசிகலா புதிய கட்சி தொடங்கியதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியை பாதிக்க செய்வதற்காக தான். தனக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் வழங்குவார்கள் என்று 5 ஆண்டுகளாக காத்திருந்தார். அப்படி வழங்கவில்லை என்கிறபோதுதான் அவர் தனிக்கட்சி தொடங்குகிற முடிவுக்கு சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவுக்கும் தனிப்பட்ட விரோதம் என்று வருகிறபோது இதில் திமுக வர வேண்டிய அவசியமே கிடையாது. சசிகலாவின் நடவடிக்கைகளை அவர்கள் வேடிக்கை பார்த்தாலே போதும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்குள் உள்ளே வந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு திமுகவுக்கு தான் உள்ளதாக நினைக்கிறேன்.

காங்கிரஸ் உள்ளே வராவிட்டாலும் திமுக வலிமையாக இருக்கிறது.ஆனால் காங்கிரஸ் வரவிட்டால் திமுக மீதான தோற்றம் மாறும். அது திமுக கூட்டணிக்கு தொய்வை ஏற்படுத்தும். திமுகவை பொறுத்தவரை இது 2001 பார்முலாவை பின்பற்றுகிறார்கள். யார் வந்தாலும் கூட்டணிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் திமுக உள்ளது. அப்படி இருந்தாலும் காங்கிரஸ் இல்லாவிட்டால் கூட்டணிக்கு தொய்வுதான். காங்கிரசை பொறுத்தவரை அவர்கள் ஒரு நிலைப்பாட்டில் உள்ளனர். அந்த நிலைப்பாட்டில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை. நாளைக்கு தான் கூட்டணி தொடர்பான விவரங்கள் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


