கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தவெக தலைவர் விஜய், தேர்தல் பிராச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ இருமுறை சம்மன் அனுப்பியது. அடிப்படையில் கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி பல மணி நேரம் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
விசாரணையின் போது அதிகாரிகள் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நாளை டெல்லயில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தவெகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை விஜய் நேர்காணல் நடத்த விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், அதே நாளில் டெல்லியில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…விஜய்யிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் பெறும் சிபிஐ…
