சமயல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து சாமானிய மக்களை மத்தியல் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குழப்பமான சூழலைச் சீர் செய்து, தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் ஒன்றிய மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தவெக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு குறித்து வரும் செய்திகள், சாமானிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சில தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் இப்போது வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திண்டாடி வரும் மக்களுக்கு, இப்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்பது “இடிமேல் இடி” விழுந்தது போல உள்ளது. சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல், விநியோகத்தில் தாமதம் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் அவலமும் ஆங்காங்கே அரங்கேற வாய்ப்புள்ளது. அதை உடனே கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக, வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நேரடியாக உணவுகளின் விலை உயர்வுக்கு வழிவகுப்பதோடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். தட்டுப்பாடில்லை என்று அரசு கூறினாலும், கள யதார்த்தம் அதற்கு மாறாக இருப்பதே மக்களின் அச்சத்திற்குக் காரணம். ஒன்றிய தமிழக அரசுகள் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்காமல், உடனடியாகத் தலையிட வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி, தமிழகத்திற்குத் தேவையான எரிவாயு இருப்பை உறுதி செய்ய வேண்டும். பதுக்கல் நடவடிக்கைகளைத் தடுக்க மாநிலம் தழுவிய அளவில் அதிரடிச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
எவ்வித தடையுமின்றி மக்களுக்குச் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். மக்களின் அடிப்படைத் தேவையான உணவைச் சமைக்க உதவும் எரிவாயு விஷயத்தில் எவ்வித அரசியலும் இருக்கக்கூடாது.குழப்பமான சூழலைச் சீர் செய்து, தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் ஒன்றிய மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
