அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைக் கடத்திய கும்பலை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான பிரபல யோகா குரு பிரதீப் குருஜி (என்ற பிரதீப் ஜோதாங்கியா) உட்பட ஆறு பேர் பிடிபட்டுள்ளனர்.
லோகோ மூலம் அரங்கேறிய மோசடி

இந்தக் கடத்தலில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், காவல்துறையின் சோதனையில் இருந்து தப்பிக்க இவர்கள் கையாண்ட விநோத யுக்திதான். கள்ள நோட்டுகளை ஏற்றிச் சென்ற வாகனங்களில் ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் (Ministry of AYUSH) அதிகாரப்பூர்வ இலச்சினையை (Logo) ஒட்டியுள்ளனர். அரசு வாகனம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, எந்தச் சந்தேகமும் வராமல் மாநிலம் முழுவதும் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட இவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிக்கியது எப்படி?
அகமதாபாத்தின் அம்ரைவாடி பகுதியில் கள்ள நோட்டுகள் புழங்குவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், குற்றப்பிரிவு போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த வாகனத்தை மறித்துச் சோதனையிட்டபோது, அதில் கட்டுக் கட்டாக ரூ.500 கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிரடி சோதனையும் பறிமுதலும்:
முதற்கட்டமாக வாகனத்தில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சூரத் நகரில் உள்ள இவர்களது அச்சகத்திலும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு மேலும் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், நோட்டு அடிக்கப் பயன்படுத்தப்பட்ட நவீன இயந்திரங்களும் சிக்கின. ஒட்டுமொத்தமாக 2.9 கோடி ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆன்மீகப் போர்வையில் மோசடி
கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் குருஜி, ‘சத்யம் யோகா ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் யோகா ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். ஆன்மீக மற்றும் யோகா பயிற்சியாளர் என்ற போர்வையில், ஆசிரமத்தையே கள்ள நோட்டு அச்சடிக்கும் கூடமாகப் பயன்படுத்தியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் கும்பலுக்குப் பின்னால் வேறு ஏதேனும் சர்வதேசத் தொடர்புகள் இருக்கிறதா? அல்லது வேறு மாநிலங்களுக்கும் கள்ள நோட்டுகள் அனுப்பப்பட்டதா? என்பது குறித்துப் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
