மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் (Masoud Pezeshkian) தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த ஆலோசனையின் போது, உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிராந்தியத்தில் நிலவும் மோதல்களால் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்க, கப்பல் போக்குவரத்துப் பாதைகள் பாதுகாப்பாகவும் திறந்தும் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

பிராந்தியத்தின் நிலைப்புத்தன்மையை அச்சுறுத்தும் வகையில் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் ஈரான் அரசு காட்டி வரும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஈரான் அதிபருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஈத் (Eid) மற்றும் நவ்ரூஸ் (Nowruz) பண்டிகை கால வாழ்த்துகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். இந்த பண்டிகை காலம் மேற்கு ஆசியாவில் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிப்ரவரி 28 முதல் இப்பகுதியில் நிலவி வரும் போர் சூழலால், உலக எரிசக்தி தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்யும் ஹார்முஸ் நீரிணைப் பாதையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தூதரக அதிகாரிகள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பிரதமரின் இந்த நேரடித் தலையீடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த வாரம் இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக, சில இந்திய எரிவாயு கப்பல்கள் (LPG tankers) ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
