இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் எம்.பி. தெரிவித்துள்ளாா்.


இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் புதிய சவால்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக கத்தார் நாட்டில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த தகவல்கள், உலகளாவிய LNG (திரவ இயற்கை எரிவாயு) விநியோகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கத்தாரிலிருந்து இந்தியாவுக்கான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்று ஒரு அரசு அதிகாரி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.
உலகின் நான்காவது மிகப்பெரிய LNG இறக்குமதி நாடான இந்தியா, தனது எரிவாயு இறக்குமதியில் சுமார் 41 சதவீதத்திற்கு கத்தாரையே சார்ந்துள்ளது.
அரசுத் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியா 27 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான LNG-ஐ இறக்குமதி செய்தது; இதில் கத்தார் மட்டும் 11.2 மில்லியன் டன்களை விநியோகித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, “கத்தாரின் LNG உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது; அதன் விளைவுகள் இந்தியாவையும் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளாா்.
மொத்தத்தில், மத்திய கிழக்கில் உருவாகும் இந்த நிலைமை, இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி சார்பை மீண்டும் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மாற்று விநியோக வழிகளைத் தேடும் முயற்சிகளும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை வலுப்படுத்தும் திட்டங்களும் இப்போது அவசியமான கட்டமாக மாறியுள்ளன. இல்லையெனில், தொழில் துறையில் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
