அண்ணாமலைக்கு விதித்த கெடு முடிந்து விட்டதால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கான தேதியை குறித்து இருக்கிறார் டி. ஆர். பாலு எம்பி.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் என்று சொல்லி வந்தவர், திடீரென்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து பட்டியலில் திமுக எம்பி டி. ஆர். பாலுவின் சொத்து பட்டியலும் இடம்பெற்று இருந்தது . தன்னை பற்றி அவதூராக செய்திகளை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் டி ஆர் பாலு. இதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க மறுத்தார். வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திக்க தயார் என்றும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் சென்னை தாம்பரம் மாநகராட்சியில் பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மண்டல குழு தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது . இந்த கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,
’’ அண்ணாமலை என்னை பற்றி அவதூறாக செய்தியை வெளியிட்டதற்காக அவருக்கு நோட்டீஸ் அளித்தேன். ஆனால் தற்போது வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 48 மணி நேரம் அவருக்கு கெடு கொடுத்திருந்தேன். அதுவும் முடிந்து விட்டது. 21 கம்பெனிகள் எனது கம்பெனிகள் என்று சொல்லி இருக்கிறார் . ஆனால் நான் மூன்று நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக இருக்கிறேன்.
மேலு, ம் எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த நிறுவனத்திலும் நான் இயக்குநர் கிடையாது. தேர்தலில் நிற்கும் போது சொத்து கணக்குகள் கொடுத்திருக்கின்றேன். அதை பார்த்துக் கொள்ளலாம்’’என்றவர்,
’’ஒரு வன்மத்தோடு அண்ணாமலை இதைச் செய்திருக்கிறார். அதனால் நான் அவர் மீது வழக்கு தொடராமல் இருக்க மாட்டேன். வரும் எட்டாம் தேதி அவர் மீது சட்டபூர்வமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன் ’’என்று கூறியுள்ளார்.