ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த திரைப்படம் தணிக்கை குழுவின் மறுஆய்வில் இருந்தபோதே இணையத்தில் கசிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில், திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தரப்பில், “நான் ஒரு பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறேன். சினிமா எடிட்டிங் தொடர்பான நிபுணர் அல்ல. இந்த விவகாரத்தில் யாரிடமும் பணம் பெறவில்லை” என்று வாதிடப்பட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் தரப்பில், கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் என்பவர் திரைப்படத்தை நகலெடுத்து உமா சங்கருக்கு அனுப்பியதாகவும், பின்னர் அவர் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவல்துறை தரப்பில், “திரைப்படம் எடிட்டிங் ஸ்டுடியோவிலிருந்தே கசிந்துள்ளது. பிரசாந்த் தனது லேப்டாப்பில் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பிறருடன் பகிர்ந்துள்ளார். இந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம்” என வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த படத்தின் தயாரிப்பில் தினமும் சுமார் 500 பேர், 145 நாட்களுக்கு மேல் உழைத்துள்ள நிலையில், அவர்களின் உழைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த வாதங்களை பரிசீலித்த நீதிபதி இளந்திரையன், வழக்கின் தீவிரத்தையும், விசாரணையின் அவசியத்தையும் கருத்தில் கொண்டு, உமா சங்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்…வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடி மாற்றம்…
