2026-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட தமிழக மேல்நிலைப் பள்ளி (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகளில், தமிழ் பாடத்தில் 83 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இத்தனை பேர் முழு மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வெளியாகியுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ள நிலையில், தமிழ் பாடத்தில் மாநில அளவில் 83 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பது தாய்மொழிக்கு கிடைத்த பெருமை என தமிழக தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாக சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இது மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தமிழ்மொழி மீதான ஆர்வத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக தமிழ் ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் நீ. இளங்கோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவது எளிதான விஷயம் அல்ல என்று குறிப்பிட்டார். குறிப்பாக இலக்கணம், செய்யுள், உரைநடை, புரிதல் திறன் உள்ளிட்ட பல்வேறு கூறுகளில் ஆழ்ந்த அறிவு தேவைப்படுவதால், தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுப்பது மாணவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும் என்றார்.
அத்தகைய சூழலில் மாநிலம் முழுவதும் 83 பேர் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றிருப்பது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தாய்மொழி கல்விக்குமான அங்கீகாரமாக பார்க்கப்பட வேண்டும் என அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் தமிழில் அதிக மாணவர்கள் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை
