வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மறு தேர்வை உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். ஆனால் தேர்வு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக ராஜஸ்தான் மாநில காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தள செயலிகள் மூலம் கையால் எழுதப்பட்ட வினாத்தாள்கள் முன்கூட்டியே பரப்பப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், மறு தேர்வுக்கான தேதி மற்றும் புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், மறு நீட் தேர்வை உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஃபைமா என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை மறுகட்டமைத்து சீர்திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் நடைபெறவுள்ள நீட் தேர்வு உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இணைய பாதுகாப்பு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், வினாத்தாளை கசியவிட்டது யார், விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசிய அளவில் மேலும் கவனம் பெறுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
