கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party – CJP), நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இக்கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நடைபெற உள்ள இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆதரவாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் தேசியக் கொடியும் மற்றொரு கையில் புத்தகமும் ஏந்தி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இளைஞர்களுக்கு அபிஜீத் திப்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், போராட்டம் நடத்துவதற்காக இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அனுமதி கோரிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டால் அதனை பரிசீலிப்போம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போராட்ட அழைப்பு சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் பரவிய தகவல்கள் மூலமாகவே அதிகாரிகளுக்கு தெரியவந்ததாகவும், அபிஜீத் திப்கே தலைமையிலான அமைப்பிடமிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தற்போது முதல்முறையாக களப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து அபிஜீத் திப்கே தொடங்கிய சமூக வலைத்தள பக்கம் மிகக் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அந்தப் பக்கத்திற்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், அதே பெயரில் மீண்டும் தொடங்கப்பட்ட பக்கமும் அதிக ஆதரவாளர்களை ஈர்த்தது.
இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் இயக்கமாக அறியப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தற்போது நேரடி அரசியல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதன் முதல் முக்கிய நடவடிக்கையாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள போராட்டம் கவனம் ஈர்த்துள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற சூழல் எதிரொலி – இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 6.6%-ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி
