மனைவி ஆர்த்தியுடன் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக நடிகர் ரவிமோகன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பொதுவெளியிலும், ஊடகங்களிலும் கருத்து தெரிவிக்கக் கூடாது என இரு தரப்பினருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ரவிமோகன் ஊடகங்களை சந்தித்து பேசியதாக ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனது செயலுக்காக மன்னிப்பு கோரி பொது அறிவிப்பு வெளியிடத் தயாராக இருப்பதாக ரவிமோகன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி, “எனது கருத்துகளால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி ரவிமோகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், மன்னிப்பு கோரி ஏற்கனவே நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பு தொடர்பான விவரங்களையும் ரவிமோகன் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் பேசிய விவகாரத்தில் நடிகர் ரவிமோகன் அதிகாரப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
