தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த அவர், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பெயர்களை நேரடியாகச் சொல்லாமல் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு நிலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு முதல்வர் தனது பதிலுரையில் விளக்கம் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், அரசியல் லாபத்திற்காக சில எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சில தரப்புகள் பிரச்சினைகளை பெரிதுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது “பார்ட்டி பண்ட்” என்ற சொல்லை பயன்படுத்தியதாக கூறப்பட, எந்தக் கட்சியை குறிப்பிட்டார் என்ற விவகாரம் அவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். “தைரியம் இருந்தால் எந்தக் கட்சியைச் சொல்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகக் கூறுங்கள். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் சவால் விடுத்தார். மேலும், தாம் நேற்று உரையாற்றியபோது அமைச்சர்கள் இடையூறு செய்ததாகவும், அதற்கு அவைத் தலைவரின் அனுமதி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், முதல்வரின் உரையிலும் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்ததாக அவர் கூறினார்.
நேற்றைய கூட்டத்தில் தாம் பேசி முடித்தவுடன் அவை நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் தொலைக்காட்சியில் பார்த்தபோது மற்றொரு அமைச்சர் பதிலுரை வழங்கியதை அறிந்ததாகவும் உதயநிதி தெரிவித்தார். இது அவை மரபுகளுக்கு ஏற்பதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், அவையில் யார் பேசினாலும் ஆதாரமற்ற கருத்துகள் இடம்பெறக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உரைகளில் விதிமுறைகளை மீறும் பகுதிகள் இருந்தால் அவை ஆய்வு செய்யப்பட்டு நீக்கப்படும் என்றும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், முந்தைய நாள் கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச அனுமதி பெற்றிருந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறியிருந்தனர். இதனையும் சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
