
திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்துவந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று ( சனிக்கிழமை) நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முறிந்தது 9 ஆண்டுகால பந்தம் :
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மதிமுக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடித்து வந்தது. கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. இந்நிலையில், அண்மைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களைத் தொடர்ந்து, கூட்டணியை விட்டு வெளியேற மதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தங்களுக்கு அவமதிப்புகள் இழைக்கப்பட்டதாகவும், மதிமுகவின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டி வந்த நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பியபோதிலும், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும், இது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் தங்களை விட சிறிய கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டதாகவும், கூட்டணியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்திருந்தார். “ஒன்பது ஆண்டுகளாக கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்த போதிலும், எங்களின் சுயமரியாதையை விட்டுக்கொடுத்துதான் நீடிக்க வேண்டியிருந்தது,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்கவோ அல்லது அக்கூட்டணியில் இணையவோ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில், தவெக உடனான கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்படும் என மதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
