Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சரின் 'Thug Life' வீடியோ விவகாரம் - முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த...

அமைச்சரின் ‘Thug Life’ வீடியோ விவகாரம் – முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியின் போது எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் ‘Thug Life Moment’ வீடியோ விவகாரத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.அமைச்சரின் 'Thug Life' வீடியோ விவகாரம் - முதல்வர் ஜோசப் விஜய் முழுமையான விசாரணை நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்!

​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ​சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான வீடியோ, ​”சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமான நேற்று, தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது, தன்னுடைய நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைச்சர் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

​இந்த வீடியோ குறித்து அமைச்சர் தரப்பில், ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உடல்நலக் குறைவான தனது கைக் குழந்தையோடு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்குத் தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ஏ.டி.எம் கார்டு மூலம் கிரஷ் (Crush) செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும்’ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

​உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே ‘Thug Life Moment’ ஆகப் பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் விளக்கம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ​”அமைச்சரின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியாது.”

​அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடந்து செல்வாரா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

​போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரைப் புகழ் பாட வைப்பதன் மூலமாகவோ, அல்லது மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்கக் குழந்தைகளைப் பயன்படுத்தி இன்ஸ்டா ரீல்ஸ்களை (Insta Reels) வெளியிடுவதன் மூலமாகவோ மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.

​எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கிய மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டில் முதலமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும். இதுகுறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில், அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே இந்த அரசின் போதைப்பொருள் ஒழிப்புக்கான உண்மையான ஆரம்பப் புள்ளியாக அமையும்” என்று டி.டி.வி.தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!

MUST READ