Homeசெய்திகள்தமிழ்நாடு"மேகதாது அணை : தமிழகம் பாலைவனமாகும்; ஜல்லிக்கட்டு பாணியில் போராட வேண்டும்!" - ராகுல் காந்திக்கு...

“மேகதாது அணை : தமிழகம் பாலைவனமாகும்; ஜல்லிக்கட்டு பாணியில் போராட வேண்டும்!” – ராகுல் காந்திக்கு அன்புமணி கோரிக்கை!

-

- Advertisement -

ராகுல் காந்தி - மேகதாது அணை - அன்புமணி ராமதாஸ்
​”மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் பாலைவனமாகிவிடும்; அடுத்த தலைமுறைக்குக் குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும்” எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

மேகதாது அணைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வரும் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது  கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது :

we-r-hiring

​”தமிழகம் பாலைவனமாகும் – விழிப்புணர்வுப் பயணம்” 

​”மேகதாதுவில் அணை கட்ட அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, அங்கு அணை கட்ட ஒரு துளி கூட அனுமதி கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணத்தை நான் மேற்கொண்டுள்ளேன்.

​துரதிர்ஷ்டவசமாக, இன்னும் நிறைய மக்களுக்கு மேகதாது அணை கட்டப்பட்டால் என்ன நடக்கும் என்ற விழிப்புணர்வு இல்லை. அந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறுவது உறுதி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழகமும் எப்படித் திரண்டதோ, அதேபோல மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும் மக்கள் வீதிக்கு வந்து போராட முன்வர வேண்டும்.”

​வரலாற்று மரபுகளை மீறும் கர்நாடகா:

​”ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே, காவிரியின் 75 சதவீதத் தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், எஞ்சிய 25 சதவீதத் தண்ணீரை மட்டுமே அன்றைய மைசூர் மாகாணம் பயன்படுத்த வேண்டும் என்றும் தெளிவான ஒப்பந்த நிலை இருந்தது.

​மேகதாதுவில் அணை கட்டுவதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படி இருக்கும்போது மேகதாது நடுவர் மன்றத்தை நாம் ஏன் ஏற்க வேண்டும்? எனவே, இது தொடர்பாகத் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தவறான ஒரு தீர்மானமாகும். 2033-ஆம் ஆண்டு வரை மேகதாது அணைத் திட்டத்தைக் கொண்டு வரக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள போதிலும், அதே நீதிமன்றம் விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயார் செய்யுமாறு கூறி வருவது முரணாக உள்ளது.”

அன்புமணி ராமதாஸ்
ராகுல் காந்திக்கு அன்புமணி விடுத்த கோரிக்கை:

​கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசைச் சுட்டிக்காட்டிப் பேசிய அன்புமணி:
​”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து ‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்’ என்று பேசி வருகிறார். ஆனால், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் சுமார் 12,500 ஏக்கர் பரப்பளவிலான அடர்ந்த வன நிலங்கள் நீரில் மூழ்கி அழியும்; இதனால் வனவிலங்குகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாகப் பாதிக்கும்.

​இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பைப் புரிந்து கொண்டு, ராகுல் காந்தி அவர்கள் மேகதாது அணைத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். மேலும், இதனை உடனடியாகக் கைவிடுமாறு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அவர் அறிவுறுத்த வேண்டும்.”

தமிழக அரசு செய்ய வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்:

​ “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கக் கேரளா அரசு எப்படி அடுக்கடுக்கான வழக்குகளைப் போட்டதோ, அதேபோல் நாமும் மேகதாதுவைத் தடுக்கப் பல முனைகளில் சட்டப்படியான வழக்குகளைத் தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துச் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் (MPs & MLAs) ஒன்றிணைந்து, புதுடெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அழுத்தம் தர வேண்டும்.”

​”டி.கே.சிவகுமாரின் தேர்தல் அரசியல்”

​”வருகிற 2028-ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், தனது அரசியல் செல்வாக்கையும் தொகுதியையும் தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இவ்வாறு பிடிவாதமாகச் செயல்பட்டு வருகிறார்” என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

MUST READ