Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏடிஎம் அறைக்குச் செல்ல இரும்பு தடுப்பு கம்பிகளால் தடை: பணம் எடுக்க...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏடிஎம் அறைக்குச் செல்ல இரும்பு தடுப்பு கம்பிகளால் தடை: பணம் எடுக்க முடியாமல் பக்தர்கள் அவதி – அகற்றக் கோரிக்கை!

-

- Advertisement -

​தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமன்றி, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களின் அவசரத் தேவைக்காகக் கோயில் வளாகத்திற்குள் மூன்று முன்னணி வங்கிகளின் ஏடிஎம் (ATM) மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்சமயம் கோயில் நிர்வாகம் எடுத்துள்ள சில நடவடிக்கைகளால் இந்த ஏடிஎம் மையங்களைப் பக்தர்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில், ஏடிஎம்,

we-r-hiring

இரும்பு தடுப்புகளால் சிறைபட்ட ஏடிஎம் அறைகள்
​இந்த ஏடிஎம் அறைகள் அனைத்தும் பக்தர்கள் பொதுத் தரிசனத்திற்குச் செல்லும் பாதையையொட்டி அமைந்துள்ளன. விசேஷ நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது அவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக, ஏடிஎம் அறைக்குச் செல்லும் வழியிலேயே இரும்பு தடுப்புக் கம்பிகளை (Barricades) வைத்து ஆங்காங்கே பாதையை அடைத்துள்ளனர்.
​இதனால் ஏடிஎம் அறைக்குச் சென்று பணம் எடுக்க நினைக்கும் பக்தர்கள் உள்ளே நுழைய முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல மணி நேரம் வரிசையில் நின்றுவிட்டு அவசரத் தேவைக்குப் பணம் எடுக்க முடியாமல் பல பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

​பக்தர்களின் முக்கிய கோரிக்கைகள்
​அடையாளப் பலகைகள் தேவை: வெளி மாநிலங்கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்குக் கோயில் வளாகத்தில் ஏடிஎம் எங்கு இருக்கிறது என்றே தெரிவதில்லை. எனவே, அனைவரும் எளிதில் கண்டறியும் வகையில் முக்கியமான இடங்களில் ஏடிஎம் இருப்பதற்கான அடையாளப் பலகைகளை வைக்க வேண்டும்.

​எப்போதும் பணம் இருக்க வேண்டும்
கோயில் வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் பல நேரங்களில் “பணம் இல்லை” (No Cash) என்ற போர்டு தொங்குகிறது. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, எந்த நேரமும் ஏடிஎம்களில் பணம் இருப்பதை வங்கி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
​கூடுதல் ஏடிஎம் மையங்கள்: பக்தர்களின் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு, கோயில் வளாகம் மட்டுமன்றி நாழிக்கிணர் பேருந்து நிலையம் மற்றும் கோயிலின் நுழைவாயில் முன்பும் கூடுதல் ஏடிஎம் அறைகளை அமைக்க வேண்டும்.

சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்
ஆன்மீகப் பெருமை வாய்ந்த திருச்செந்தூர் திருத்தலத்திற்கு வரும் ஏழை, எளிய பக்தர்கள் அவசரத் தேவைகளுக்குக் கையில் பணமில்லாமல் தவிப்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் உடனடியாக தலையிட வேண்டும்.
​எனவே, கோயில் நிர்வாகம் உடனடியாக ஏடிஎம் அறைகளின் முன்பு வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புக் கம்பிகளை அப்புறப்படுத்தி, பக்தர்கள் எளிதாகச் சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ