“சார், எங்களை விட்டுட்டுப் போகாதீங்க சார்… நீங்கதான் எங்க பள்ளிக்கூடத்துலேயே இருக்கணும்” என்று பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாகக் குரலெழுப்பியும், மாணவிகள் கண்ணீர் விட்டுப் பாதங்களைத் தொட்டுக் கதறியும் தங்களது தலைமையாசிரியரைத் தடுத்த நிறுத்தப் போராடிய சம்பவம் ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்தையும் உருக வைத்துள்ளது.
கல்வி வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தின் விபரம் வருமாறு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருபவர் தெட்சிணாமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் பொறுப்பேற்றது முதல், ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் இரவு பகலாகப் பாடுபட்டு வந்துள்ளார். இவரது அர்ப்பணிப்புமிக்க கடுமையான உழைப்பால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் இப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் யாரும் எதிர்பாராத வகையில் 91 சதவீதத்திற்கும் மேலாக எகிறி சாதனை படைத்தது.

மாணவர்கள் மீது அளவுகடந்த பாசமும் அக்கறையும் காட்டி, ஒரு தந்தையைப் போல அரவணைத்து வந்ததால், தெட்சிணாமூர்த்தி என்ற பெயர் அந்தப் பள்ளி மாணவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருந்தது.

சொந்த ஊருக்கு மாறுதல் – கதறிய மாணவர்கள்
இந்நிலையில், தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தி தனது தனிப்பட்ட குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது சொந்த விருப்பத்தின் பேரில் (Mutual/Own Request) சொந்த மாவட்டத்திற்குப் பணி மாறுதல் (Transfer) கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவருக்கு மாறுதல் உத்தரவு வந்து, அவர் பள்ளியிலிருந்து விடைபெறத் தயாரானார்.
இந்தத் தகவல் இன்று மதியம் பள்ளி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், இன்று மாலை பள்ளி முடியும் நேரத்தில் வகுப்புகளை விட்டு வெளியேறி, மைதானத்தில் ஒட்டுமொத்தமாகத் திரண்டனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றுகூடித் தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தியைச் சூழ்ந்து கொண்டனர். “எங்க பள்ளியை விட்டுப் போகாதீங்க சார்” என்று ஒட்டுமொத்தமாக விம்மி விம்மி அழத் தொடங்கினர். சில மாணவிகள், “சார் ப்ளீஸ் சார், போகாதீங்க சார்” என்று அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு நெஞ்சாரக் கதறி அழுத காட்சி அங்கிருந்த ஆசிரியர்களையும், பொதுமக்களையும் கண் கலங்கச் செய்தது.
நேற்று பெற்றோர் மறியல்; இன்று மாணவர்கள் பாசம்
இப்பள்ளியின் தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்திக்கு எதிராக அண்மையில் நகரின் சில பகுதிகளில் மர்ம நபர்களால் அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதனை வன்மையாகக் கண்டித்தும், நேர்மையான தலைமையாசிரியருக்கு ஆதரவாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்றுதான் பட்டுக்கோட்டையில் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டம் நடத்தித் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். பெற்றோர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, இன்று 2,000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளே தங்களின் பாசப் போராட்டத்தைக் கண்ணீர் மல்க வெளிப்படுத்தியிருப்பது, பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாணவர்களின் பாச மழையில் நனைந்த தலைமையாசிரியர், அவர்களைத் தேற்ற முடியாமல் தவித்த காட்சி, உண்மையாக உழைக்கும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியருக்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
