Homeசெய்திகள்இந்தியாFCRA திருத்த மசோதா சிறுபான்மையினரின் சொத்துகளைக் கொள்ளையடிக்கும் கொடூரம் – எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

FCRA திருத்த மசோதா சிறுபான்மையினரின் சொத்துகளைக் கொள்ளையடிக்கும் கொடூரம் – எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

ஒன்றிய அரசால் கடந்த 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA) என்பது மிகவும் கொடூரமானது; இது சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் ஜெயின் மக்களின் சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான (MP) வில்சன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வில்சன்
​வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தத்திற்கு (FCRA Amendment Bill) எதிராக, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. வில்சன் பேசிய விபரங்கள் வருமாறு:

we-r-hiring

சொத்துகளை அபகரிக்கும் ஆபத்து:
“முறையான உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுத்தான் சிறுபான்மையினரின் கல்வி நிலையங்கள், முதியோர் இல்லங்கள், ஆலயங்கள், காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதைய புதிய FCRA சட்டத்தின்படி, மீண்டும் உரிமம் பெறவில்லை என்றாலோ, புதுப்பிக்கத் தவறினாலோ அல்லது கொடுக்க மறுத்தாலோ அந்தச் சொத்துகள் அனைத்தும் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் மூலம் கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை ஒன்றிய அரசே விற்றுவிட்டு, அதன் மூலம் வரும் லாபத்தை தங்களது அரசு கஜானாவில் சேர்த்துக் கொள்ளும் அபாயகரமான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததற்குப் பிறகு, ஏற்கனவே சுமார் 26,000 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படாமல் தடுத்து முடக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஒட்டுமொத்த கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை அமைப்புகளின் சொத்துகளையும் அபகரிக்கவே ஒன்றிய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

டெல்லியில் பிரம்மாண்ட போராட்டம்:
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் ‘சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு’ தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு பிரார்த்தனைக் கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். இதன் அடுத்தகட்டமாக, இன்று மாவட்ட ஆட்சியர் மூலமாகப் பிரதமருக்கு எங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பினையும் மனுவாக அனுப்பியுள்ளோம். தமிழகத்தின் அந்தந்த மாவட்டங்களிலும் இத்தகைய புகார் மனுக்கள் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மசோதாவுக்கு எதிரான எங்களது கையெழுத்து இயக்கம் டிஜிட்டல் (Digital) தளங்களிலும் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து, நேராகப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்த ஆபத்தான திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். அப்படியும் ஒன்றிய அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால், அடுத்த கட்டமாகத் டெல்லியில் மிக பிரம்மாண்டமான முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எச்சரித்துள்ளார்.

MUST READ