கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமச் சுரங்கத் திட்டத்தை நீட்டித்துள்ள தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த உத்தரவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதாவது:


நிலவளமும் நீர்வளமும் பாதிப்பு
”கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமச் சுரங்கத் திட்டம் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இங்கிருந்து அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதன் காரணமாக, ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்டத்தின் நிலவளமும், நீர்வளமும் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.
தேர்தல் பிரச்சாரங்களின் போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணு கனிமச் சுரங்கத்தை நிரந்தரமாக மூடுவோம்’ என்று தமிழக வெற்றி கழகம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாகச் சுரங்கத் திட்டத்தை நீட்டிப்பதற்கான அனுமதியை இந்த அரசு வழங்கியுள்ளது.
திமுக அரசு மீதும் சாடல்
கடந்த திமுக ஆட்சியிலும் இந்தச் சுரங்கத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராகப் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய போதும், அப்போதைய திமுக அரசு இந்த அணு கனிமச் சுரங்கத்தை மூடுவதற்கு முன்வரவில்லை. தற்போது அணு கனிமச் சுரங்கத் திட்டம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிராக திமுகவினர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன்.
அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்றாலும், தற்போதாவது இதனை எதிர்க்க முன்வந்திருப்பது நல்ல விஷயம். எப்படிப் பார்த்தாலும், தமிழக அரசு தற்போது அணு கனிமச் சுரங்கத் திட்டத்தை நீட்டித்திருப்பது எவ்வகையிலும் சரியல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நீட்டிப்பு முடிவை வன்மையாக எதிர்க்கிறது. மக்களின் நலனைக் கருதி, தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று சண்முகம் வலியுறுத்தினார்.
